தமிழகத்தில் நகர்ப்புற அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்களில் ஒன்றாக இருக்கிறது விக்கிரவாண்டி. இங்கு மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 7வது வார்டுக்கான (பெண் பொது) வேட்புமனு தாக்கலை நேற்று (04.02.2022) மாலை 3.30 மணி வரையில் எந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்யவில்லை.
இதற்கு காரணமாக, காவல் துறையால் தேடப்படும் பிரபல குற்றவாளி கைப்பிள்ளை என்கிற வரதராஜின் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது. விக்கிரவாண்டி வானியர் தெருவை சேர்ந்த இவர், இவர்மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என 19 வழக்குகள் வரை இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. விழுப்புரம், விக்கிரவாண்டி, வளவனூர், திண்டிவனம் போன்ற காவல் நிலையங்களில் இவர் மீது இவ்வழக்குகள் கிடப்பில் உள்ளது. விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையங்களில் உள்ள வெவ்வேறு வழக்குகளில் இவர் தேடப்பட்டு வருவதாகவும், இவர் மீது சரித்திர பதிவேடு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இவரது மனைவியை 7வது வார்டில் வேட்பாளராக நிறுத்துவதற்கு முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. ஆகவே, வரதராஜ் மீதுள்ள அச்சத்தால் அரசியல் கட்சியினர் முதற்கொண்டு வேறு யாரும் இந்த வார்டில் போட்டியிட முன்வரவில்லை. இவரது மனையின் மீதும் குற்ற வழக்குகள் உள்ளது. அதனால் கணவன் மனைவி இருவருமே தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, யார் இந்த வார்டில் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இன்று மாலை வரை இருந்து வந்தது. சுமார் 3.30 மணியளவில், விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த இளம் பெண் ஆனந்தி என்பவர் 7வது வார்டில் திமுக சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர், வரதராஜ் மனைவியின் தங்கை தான் என கூறப்படுகிறது. தற்போது 5 மணியை கடந்துவிட்ட நிலையில், வேறு யாரும் இதற்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, வேட்புமனு பரிசீலனை முடிவில் வரதராஜின் உறவினரான இப்பெண் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்