தமிழ்நாடு முழுவது வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் விறுவிறுப்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 1- வது வார்டு அ.தி.மு.க வேட்பாளராக நகரச் செயலாளர் விஜயன் நிற்கிறார் 17- வது வார்டு வேட்பாளராக விஜயனின் மனைவி உமா நிறுத்தப்பட்டுள்ளார்.






இந்த நிலையில் இன்று மாலை திருமங்கலம் 1-வது வார்டு செங்குளம் பகுதியில் விஜயன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்சி என்னை கைவிட்டு விட்டதாகவும் இந்த மக்களை நம்பித்தான் நான் போட்டியிடுகிறேன் என்றும். சேடப்பட்டி முத்தையாவின் உப்பை நான் தின்றுள்ளேன். மணிமாறன் தோற்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லை என் கட்சி ஜெயிக்க வேண்டும் வேலை செய்தேன். நான் தோற்கும் பட்சத்தில் உயிரோடு இருக்க மாட்டேன். அப்படி நான் இறந்து போனால் முதல் மாலையை இந்த ஊர்தான் எனக்கு அணிவிக்க வேண்டும் என்று கதறி அழுது கொண்டே கூறினார். இதைக்கண்ட அந்தப்பகுதி பெண்களும் கண்கலங்கினர்.




தான் கஷ்டத்தில் இருந்த போது என் கட்சி கைவிட்டது இப்போதும் தனிமரமாக தான் உள்ளேன். 27 பேர் என்னை நம்பியே உள்ளனர். இந்த ஊருக்கு நான் துரோகம் செய்து இருந்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறி தனது குடும்பத்துடன் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் கதறி அழுதது இந்தப் பகுதி பொது மக்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.