கர்நாடகா ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் அமைப்புக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்த அந்நிய தலையீடும் தேவையற்றது என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் அமைப்பின் தூதர் ரஷித் ஹுசைன் தனது ட்விட்டரில், " ஒருவர்தான் தேர்வு செய்துள்ள மதத்தினை அல்லது மத நம்பிக்கையினை அனுபவிப்பதற்கு மத அடையாளம் பொருந்திய உடையைத் தேர்ந்தெடுக்கும் முழுமையான உரிமையை பெறுகிறார். இந்திய மாநிலமான கர்நாடகா மதம் ரீதியான சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். உடை அணியும் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. பள்ளிகளில் ஹிஜாப் தடை விதிப்பது மத சுதந்திரத்தை மீறுவதாக இருக்கிறது. இதன்மூலம், பெண்கள், சிறுமிகளின் மத ரீதியான வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது. அவர்களை, களங்கப்படுத்தும் விதமாகவும், ஒதுக்கி வைப்பதாகவும் அமைகிறது" என்று பதிவிட்டார்.
இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "கர்நாடக மாநிலத்தின் சில கல்வி நிறுவனங்களில் ஆடைக் கட்டுப்பாடுகள் தொடர்பான விவகாரத்தை, நீதித்துறை ஆய்வுக்கு (Judicial Examination) கர்நாடக உயர்நீதிமன்றம் உட்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், அது உருவாக்கித் தந்த வழிமுறைகளின்படியும், நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தைப் பின்பற்றியும் விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும். இந்தியாவை நன்கு அறிந்தவர்கள் அதன் உண்மைத்தன்மையைக் குறைத்து மதிப்பிடாமல் பாராட்ட முன்வருவார்கள். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்த அந்நிய தலையீடும் தேவையற்றது. சில நோக்கங்களுடன் வெளியிடப்படும் கருத்துக்கள் வரவேற்கப்படாது" என்று தெரிவித்தார்.