தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிப்ரவரி 19 ம் தேர்தல் நடைபெற உள்ளது.  இதனையொட்டி தேர்தல் களம் காணும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காலை, மாலை என இரு வேளைகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளும் வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். 






அந்த வகையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 48ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அமுதா பாலயோகி முனிச்சாலை  பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த வேட்பாளர் கொசுவலைக்குள் வந்து வாக்கு சேகரித்தார். இந்த வார்டில் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் டெங்கு பரவும் அபாயத்தில் உள்ளது. எனவே மாமன்ற உறுப்பினராக வந்த உடனே முற்றிலும் கொசுக்களை ஒழித்து டெங்கு இல்லாத மதுரையின் ஒரு முன்மாதிரியான வார்டாக மாற்றுவேன் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நூதன பிரச்சாரம் அனைவரையும்  கவரும் வகையில்  இருந்தது. 



 


 

48 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் அமுதா பிரச்சரத்தின் போது...” நம்முடைய வார்டில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுப்பேன். குடி நீர் வசதி, சாலை வசதி மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கொசு காரணமாக டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனவே இந்த முறை தாமரை சின்னத்திற்கு போட்டியிட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.