நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 100 வார்டுகளை கொண்ட மதுரையில் அதிகளவு பெண்கள் தேர்தலில் களம் காண்கின்றனர். பி.ஜே.பி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களில் திருநங்களைகளும் போட்டி களத்தில் உள்ளனர். டீ ஆத்திக் கொடுப்பது, அயன் செய்வது, தோசை சுடுவது, பரோட்டா போடுவது என பலரும் பல ரகங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் சுயேச்சை பெண் வேட்பாளர் ஒருவர் பாரம்பரிய முறைப்படி மங்கல வாத்தியம் முழங்க, வெற்றிலை பாக்கு வைத்து வரும் 19 ஆம் தேதி கண்டிப்பாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என  வலியுறுத்தி வாக்கு சேகரிக்கிறார்.






மதுரை மாநகராட்சி 76-வது வார்டு பகுதியில் சுயேச்சையாக பெண் வேட்பாளர் 'மணிமேகலை ஆனந்த்'  தேர்தல் களம் காண்கிறார். இந்நிலையில் தனது வார்டு பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் வேண்டுதலை முடித்து வாக்கு சேகரிக்க புறப்படுகிறார். கிராமிய கலையை மீட்டெடுக்கும் வகையில் மங்கலவாத்தியம் முழங்க ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார். அப்போது வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று வெற்றில பாக்கு  வைத்து வாக்கு சேகரிக்கிறார். மேலும் பூக்கட்டி பிரச்சாரம் உள்ளிட்ட பல நூதன பிரச்சாரங்களையும் செய்து வாக்களர் கவனத்தை ஈர்க்கிறார்.



 

இது குறித்து மணிமேகலை ஆனந்த் " தென் மாவட்டங்களில் சந்தனத் திலகம் வைப்பது, வெற்றிலை பாக்கு கொடுப்பது பாரம்பரியமான ஒன்று. அது உறவை வலுப்படுத்தும். வாக்காளர்களிடம் உறவினர் போன்று உரிமையோடு வாக்கு சேகரித்து வருகிறோம். மங்கல வாத்தியம் இசைப்பதால் கிராமிய கலைகளை ஊக்கு விக்கமுடியும். இது போன்ற பாரம்பரிய விசயங்களை கையில் எடுத்து வாக்கு சேகரித்து வருகிறேன். வீடுகளில் ஒளியேற்ற உதவும் தீப்பெட்டி சின்னம் தான் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைப் போல் எனது வார்டு வாக்காளர்களில் வாழ்வில் முன்னேற்ற ஒளியை ஏற்படுத்தும் விதமாக வெற்றிபெற்றபின் செயல்படுவேன்” என்றார்.