தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இன்னும் சில தினங்களே தேர்தலுக்கு எஞ்சியுள்ளதால் தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு ஒவ்வொரு நாள் பிரச்சாரமும் மக்களை கவர்கிறதோ இல்லையோ களத்தை கலகலப்பாகி வருகிறது. அதில் எந்த கட்சியும் தப்பவில்லை. இந்த ஒரு விசயத்தில் தான், பாரபட்சம் இல்லாமல், தன் பங்கை வேட்பாளர்கள் செலுத்தி வருகின்றனர். 






நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், போட்டியிட்ட வேட்பாளர்கள், புரோட்டா கடையில் புரோட்டா சுட்டது, பஜ்ஜி சுட்டது, டீ போட்டது, இளநீர் வெட்டியது, நாத்து நட்டது என ஏதாவது ஒரு விசயத்தை செய்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதே வழியை தற்போது பின்பற்றும் உள்ளாட்சி வேட்பாளர்கள் பல்வேறு வெரைட்டிகளை காட்டி வருகின்றனர். குறிப்பாக 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




 

மதுரை மாநகராட்சி 57ஆவது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கரிமேடு பகுதியில் உள்ள வடக்குமடம், தெற்குமடம்,  சன்னதி தெருவில் வீடுவீடாக வாக்கு சேகரித்தார். ஒரு வீட்டில் பூ க்கட்டி கொண்டிந்த பெண்மணியிடம் பூக்களை கட்டி கொடுத்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து வாக்காளர்களிடம் பேசிய வேட்பாளர் வெற்றி பெற்ற உடனே வார்டு முழுவதும்  உள்ள குறைகளை மாமன்றத்தில் பேசிமக்களின்  பிரச்சனைகள் முழுவதையும்  சரி செய்வதாக தெரிவித்தார். 



 

அதே போன்று மதுரை மாநகராட்சியின் 9வது வார்டு அதாவது உத்தங்குடி பகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  தனது ஆதரவாளர்களுடன், உத்தங்குடி பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு டீக்கடைக்குள் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர்  கடையில் இருந்த மக்களுக்கு டீ போட்டு கொடுத்து  தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.



 

அதே போன்று  மாநகராட்சியின் 85 வது வார்டு பகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார். மத்திய அரசின் திட்டம் குறித்து பிட் நோட்டீஸ்கள் வழங்கி வாக்குகள் சேகரித்தார்.  மாநகராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட பெரியார்நகர், பாண்டியன் நகர், அடமந்தை உள்ளிட்ட பகுதிகளில் அமமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்  வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதோடு  அந்த வார்டில் தேவைக்களுக்கான வாக்குறுதிகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இது போன்று மதுரை மாவட்டம் முழுதும் வேட்பாளர்கள் வெரைட்டி காட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர்.