சிவகங்கை நேருபஜாரில் உள்ள தனியார் மஹாலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் அதன் ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.


இதில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், சமூக நீதி கூட்டமைப்பு என்பது ஸ்டாலின் நடத்தும் நாடகம் 50 ஆண்டுகளாக தொடர்கிறது நாடக ஆசிரியர் மகன் அல்லாவா ? அது தான் தொடர்கிறது என்று கூறினார் .




மூன்றாவது பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை. கட்சியாகவே கருதாதபோது எங்கள் வேட்பாளரை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன் பா.ஜ.கவும், காங்கிரசும் வேறு வேறு கட்சியாக இருந்தாலும் அவைகளுக்குகொள்கை ஒன்றுதான் என்றும், இந்தியா என்பது 130 கோடி மக்களின் நாடு அல்ல சில, பல முதலாளிகளின் வீடாக மாறிக்கொண்டிருக்கிறது என பேசினார்.


தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பா.ஜ.க குறித்து கூறிய கருத்துக்கு சீமான் பதிலளிக்கையில் தனித்து நின்று போட்டியிட்டு நிம்மதியை தேடிய அதிமுக 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த நிம்மதியை தேடியிருக்கலாமே என கேள்வி எழுப்பியதுடன், பா.ஜ.க 2024 தேர்தலில் தனித்து நின்று போட்டியிடுமா? என்றும் நாம் தமிழர் கட்சியை விட பா.ஜ.க தனித்து நின்று ஒரு ஓட்டு வாங்க முடியுமா? என சவால் விடுத்தவர் அப்படி வாங்கினால் பெரிய கட்சி என ஏற்றுக்கொள்கிறேன் என்றார். தற்போது அரசியல் லாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது அதனால் தான் 5 கோடி , 10 கோடி தேர்தலில்  செலவழிக்கிறேன். மறைமுக தலைவர் தேர்தல் என்பது பேரம் பேச வாய்ப்பாக உள்ளது. இதனால் ஜனநாயகம் செத்துவிடுகிறது என்றும் குடியரசு தலைவரையும் மக்களாகவே தேர்வு செய்யும் முறை கொண்டுவரவேண்டும் என்றும் பேட்டியளித்தார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.




முன்னதாக, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு சோனியா காந்தி, ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு  திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கூட்டமைப்பில் இணைய தக்க நபர்களை நியமிக்குமாறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதில், நாம் தமிழர் கட்சி பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்