தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதனை முன்னிட்டு வேட்புமனு பரிசீலனை கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. 7 ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெறப்பட்டது. இதில் பலர் தங்களது வேட்பு மனுக்களை இறுதி நேரத்தில் வாபஸ் பெற்று கொண்ட சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். மதுரையில் அ.தி.மு.க வேட்பாளர் சிலம்பம் சுற்றி பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வரும் நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது.








 

மதுரை மாநகராட்சி 16- வது வார்டில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் ஜெயவேல் 16வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் காலனி 1வது தெரு 1வது தெரு சொக்கநாதபுரம் விநாயகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.





பிரச்சாரத்தின் போது சிலம்பம் சுற்றி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும் இவருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஒருவர் எம்ஜிஆர் வேடமணிந்து அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆடியபடி வாக்கு சேகரித்தார் வாக்காளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

 

”தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் வகையிலும், அ.தி.மு.க ஆட்சி காலத்தில் செய்த திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பதாக வேட்பாளர் தெரிவித்தார்.