தனக்கு வாக்கு செலுத்தாத  இந்து வாக்காளர்களின் உடம்பில் ஓடுவது இஸ்லாமியர்கள் ரத்தமாகத் தான் இருக்கும் என்று உ.பி துமரியாகன்ச் (Domariyaganj) பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராகவேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

  


பலமதங்களை உள்ளடக்கிய சமுதாயமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நான்காவது கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தலைநகர் லக்னோ உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகள் வாக்குப்பதிவை சந்திக்கின்றன. இத்தேர்தல், ஆளும் பாஜக அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. அதற்கேற்ப, மதம், சாதி, இனம் அடிப்படையிலான வெறுப்பு பிரச்சாரங்கள் அங்கு அதிகரித்து வருகின்றன. 


முன்னதாக, உத்தரப்பிரதேச தேர்தலில் யோகிக்கு வாக்களியுங்கள் இல்லையென்றால் புல்டோசர் அனுப்பி வீடுகளை இடிப்போம் என தெலுங்கானா பாஜக எம்எல்ஏ தாக்கூர் ராஜா பேசிய வீடியோ ஒன்று பேசும் பொருளானது. மேலும், நீங்கள் உ.பி.யில் வாழ வேண்டுமென்றால், யோகி-யோகி என்று கோஷமிடுங்கள். இல்லையேல், உத்தரப்பிரதேசத்தை விட்டு வெளியேற நேரிடும்" என்றும் கூறியிருந்தார்.   


இந்நிலையில், உபி.யில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட துமரியாகன்ச் (Domariyaganj) பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராகவேந்திர பிரதாப் சிங்  மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலை முன்வைத்து பேசியுள்ளார். 


ஒரு கூட்டத்தில் பேசிய அவர், “இக்கிராமத்தில் வசிக்கும் இந்து வாக்காளர்கள் மற்றவர்களுக்கு வாக்களித்தால், அவர்கள் நாடி- நரம்புகளில் மியாக்களின் இரத்தம் [Miya- இஸ்லாமிய குடிகளை இழிவுபடுத்தும் சொல்] பரவியுள்ளது என்று பொருள். அவர் ஒரு தேசத்துரோகி. முறையற்ற பாலியல் உறவுகள் மூலம் பிறந்தவர். ஜெய் சந்த்-ன் முறையற்ற குழந்தை" என்று தெரிவித்தார்.   


மேலும் அவர்,"இத்துணை அவமதிப்புகளுக்குப் பிறகும், இந்து ஒருவர் மாற்று அணிக்குச் சென்றால், அவர் பொது வெளியில் தலை காட்ட முயாது. ஐந்தாண்டுகள் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பிரச்சனையை சரிகட்டலாம் என்று நினைத்தேன். ஒருமுறை எச்சரித்த பிறகும், நீங்கள் பிரச்சனையின் தீவிரத் தன்மையை உணரவில்லை என்றால் , நீங்கள் ராகவேந்திர பிரதாப் சிங் யார் என்பதை விரைவில் உணர்ந்து கொள்வீர்கள். எனது சமூகத்திய அழிக்க நினைப்பவர்களை அழித்துவிடுவேன்" என்று கூறியுள்ளார்.     






உ.பி மாநில முதல்வரும், கோரக்கநாதர் மடத்தின் தலைவருமான யோகி ஆதித்தியநாத் நிறுவிய இந்து யுவ வாகினி (Hindu Yuva Vahini) செயலாளராக  ராகவேந்திர பிரதாப் சிங் உள்ளார். இவர் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் மிகவும் சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதனையடுத்து, உத்தரப்பிரதேச மக்களை மிரட்டியதாக கூறி  சித்தார்த்நகர் கால்வதுரை இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.






  ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை பிரதாப் சிங் மறுத்துள்ளார். சில ஊடகங்களுக்கு அவர் அளித்த நேர்காணலில், "துமரியாகன்ச்  தொகுதியில் 37% வாக்காளர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர். இப்படி நேரடியாக வாக்காளர்களை மிரட்ட முடியுமா?   எனது கருத்துக்கள் வேறு விதமாக எடுத்துக்கொள்ளப்பட்டன. நான், எடுத்துச் சொல்லியது வேறு. உதரணமாக, இஸ்லாமிய ஆண்களை திருமணம் செய்யும் இந்து பெண்களுக்கு ஆதரவாக பேசும் இந்து மக்களை தான் எச்சரித்தேன்" என்று விளக்கமளித்துள்ளார்.