நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 39 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டிற்கு முதற்கட்டத்திலே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஏப்ரல் 19 தேர்தல்:
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பிருந்தே, தமிழ்நாட்டில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியது, தேர்தல் தேதி ஏப்ரல் 19 என அறிவிப்பு வெளியான பிறகு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு என சூடுபிடிக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணி, மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, ம.தி.மு.க., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதிமய்யம் என பலமான கூட்டணியாக அமைந்துள்ளது.
தீவிர பரப்புரையில் அரசியல் கட்சிகள்:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மட்டும் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக தே.மு.தி.க இடம்பெற்றுள்ளது. அதேபோல, பா.ஜ.க., பா.ம.க., த.மா.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து அனைத்து தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி தொடங்கியது முதலே தனித்து போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியினர் இந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகின்றனர். தங்களது கட்சிகளுக்காகவும், கூட்டணி கட்சியினருக்காகவும் அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி ஏற்கனவே தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடந்த சில வாரங்களாகவே காலை முதல் இரவு வரை தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியும் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் தொகுதியில் தனித்துப் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
சூடுபிடிக்கும் அரசியல் களம்:
இவர்கள் மட்டுமின்றி திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், தினகரன், சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் தங்களது ஆதரவு கட்சிக்காக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவிற்கு இன்னும் இரண்டு வாரமே உள்ளதால், தமிழ்நாட்டில் காலை முதல் இரவு வரை அரசியல் கட்சிகளின் பரப்புரை தீவிரமாக உள்ளது. நேரடியாக மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகளை விமர்சித்து தீவிர பரப்புரையிலும், வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். வெயில் அனல் பறந்து கொண்டிருக்கும் சூழலில், அரசியல் கட்சிகளின் தீவிர வாக்குசேகரிப்பால் தேர்தல் களமும் சூடுபிடித்து காணப்படுகிறது.
மேலும் படிக்க: Income Tax raid: நெருங்கும் தேர்தல்: தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
மேலும் படிக்க: Congress Election Manifesto: நீட் கட்டாயமில்லை, பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்!