நீட், க்யூட் ஆகிய தேர்வுகள் மாநில அரசின் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டது. மிகவும் ஏழையாக பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். மாணவர்களின் அனைத்து கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர். 


இந்த தேர்தல் அறிக்கையை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மறுக்கப்பட்ட அம்சங்களை நிறைவேற்றும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். 


 காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்!


* நீட், க்யூட் ஆகிய தேர்வுகள் மாநில அரசின் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டது.


* மகாலட்சுமி திட்டத்தின்கீழ் மிகவும் ஏழையாக பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.


* மாணவர்களின் அனைத்து கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும்.


* பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றி அமைக்கப்பட்டு ஜிஎஸ்டி 2.0 ஆக மாற்றப்படும். 


மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு


* 2025ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.


* ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை அளிக்கப்படும்.


* ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அறிமுகம் செய்யப்படாது.


* வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.


* விளையாட்டு வீரர்களுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 


* தேசிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்படும். 


* 12ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படும். 


கட்சி தாவினால் பதவி இழப்பு


* கட்சி தாவினால் பதவி இழக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும். 


* அரசுத் தேர்வுகள், அரசுப் பதவிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும். 


* இந்தியா முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். 


* பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவுபடுத்தப்படும்.


* அரசுப் பணிகளில் ஒப்பந்த முறை ரத்து செய்யப்படும். 


* எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.


* எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.


* தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க புதிய சட்டம் இயற்றப்படும். 


* உணவு, உடை, காதல், திருமணம், பயணம் ஆகிய தனிமனித சுதந்திரத்தில் தலையிட மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம். 


 இவ்வாறு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.