ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் மிகவும் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். இந்த அணிக்குதான் சிறிய குழந்தைகளில் இருந்து தள்ளாத வயதினை எட்டிய மூத்தோர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவரது அமைதியான போராட்ட குணமும்தான். 


இதற்காகவே இந்தியாவில் எந்த மைதானத்திற்கு சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடினாலும், அந்த மைதானத்தை சென்னை அணி ரசிகர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள். இப்படி தனக்கென தனி ரசிகர்கள் உலகத்தையே கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 103 வயது ரசிகர் ஒருவருக்கு, சென்னை அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார். அதில் உங்கள் ஆதரவுக்கு நன்றி தாத்தா என குறிப்பிட்டுள்ளார்.






மேலும் இந்த 103 வயது ரசிகருக்காக சென்னை அணி பிரத்யேகமான ஜெர்சியை தயாரித்து, அதில் ராமதாஸ் என்ற அவரது பெயரையும், ஜெர்சி எண்ணாக அவரது வயதையும் அச்சடித்து வழங்கியுள்ளது. இதனை பெற்றுக்கொண்ட 103 வயது ரசிகர், “ என்னை இவ்வாறு கௌரவப்படுத்தியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.