பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே, இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 


ஆந்திராவில் பிடிபட்ட 2000 கோடி ரூபாய் பணம்:


வரும் 7ஆம் தேதி மூன்றாம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் வரும் 13ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆந்திராவை பொறுத்தவரையில், மக்களவை தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது.


தென் மாநிலங்களை குறி பார்த்து வேலை செய்து வரும் பாஜக, ஆந்திராவில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதனால், தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.


ஆந்திராவில் ஆளுங்கட்சியாக உள்ள ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் முதலமைச்சர் ஜெகன் மோகன் தலைமையில் தனித்து களம் இறங்குகிறது. இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 


கண்டெய்னர்களில் வந்த பணம் யாருக்கு சொந்தம்?


இந்த நிலையில் ஆந்திர முழுவதும் வாகன சோதனையை போலீசார் தீவிரபடுத்தியுள்ளனர். அந்த வகையில், இன்று, அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கஜிராம்பள்ளி செக்போஸ்ட் அருகே போலீசார் வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக நான்கு கண்டைனர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன.


அவற்றில் ஒரு கண்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில் முழுவதும் 500 கோடி ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளாக இருப்பது தெரியவந்தது. மொத்தம் நான்கு நான்கு கண்டைனர்களிலும் 2000 கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்த நிலையில் இது பற்றி போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். 


ஒரே நேரத்தில் 2000 கோடி ரூபாய் பணம் எடுத்துச் செல்லப்பட்ட காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட உயர் மட்ட விசாரணையில் அந்த பணம் முழுவதும் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஹைதராபாத் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு எடுத்து செல்லப்படுவதும் அந்த பண முழுவதும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது. 


பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருப்பி அளிக்கப்பட்டு கண்டெய்னரில் எடுத்து செல்லப்பட்டது. ஆந்திரா மட்டும் இன்றி தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தகுந்த ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆவணங்கள் சமர்பிக்கப்படும் பட்சத்தில் அந்த பணம் திருப்பி அளிக்கப்படுகிறுது.


இதையும் படிக்க: Fact Check: கேரளாவில் சீதாராமர் கோயில் அருகே இறைச்சிக் கடை? ராகுல் காந்தி காரணமா? உண்மை என்ன?