Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறது.


ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள், நாடு முழுவதும் 10.5 லட்சம் மையங்களில் நடைபெற்று வருகிறது. 1 மணி நிலவரப்படி, பெரும்பான்மைக்கு தேவையான 272-க்கும் அதிகான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், பாஜக கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


பெரும்பான்மயை இழந்த பாஜக:


பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது என கூறப்பட்டாலும், பாஜக கடந்த இரண்டு தேர்தல்களை போன்று தனிப்பெரும்பான்மையை பெற முடியாமல் தவித்து வருகிறது. 1 மணி நிலவரப்படி பாஜக சுமார் 240 இடங்களில் மட்டுமே அந்த கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இதனால், 18வது மக்களவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மையை பெற முடியாத சூழலில் உள்ளது. எனவே, ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய சூழலை பாஜக எட்டியுள்ளது.


இதையும் படியுங்கள்: Smriti Irani: ராகுலையே தோற்கடித்த ஸ்மிருதி இரானி பெரும் பின்னடைவு! கட்டம் கட்டிய கே.எல்.சர்மா!


பாஜகவிற்கு ஆதரவளிப்பது யார்?


நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடு தலைமயிலான தெலுங்கு தேசம் கட்சி ஆகிய இரண்டு மாநில கட்சிகளும் சுமார் 30 மக்களவை தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. எனவே தற்போதைய சூழலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதில் மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு மாநில கட்சிகளும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளின் கடந்த கால வரலாற்றை அலசி பார்த்தால், அடிக்கடி கூட்டணியை மாற்றுவது என்பது சாதாரண விஷயம் தான். 


கிங் மேக்கர்கள்..!


நிதிஷ்குமார் தற்போது பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக இருக்கிறார். சந்திரபாபு நாயுடு பாஜக உடன் கூட்டணி அமைத்து, ஆந்திராவில் ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை காட்டிலும் பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னணியில் உள்ளார். தற்போதைய சூழலில் இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து 31 தொகுதிகளிலும், மற்ற சில சிறுகட்சிகள் இணைந்து 20 தொகுதிகள் என மொத்தம் 51 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இந்த 51 தொகுதியின் எம்.பிக்கள் தான், இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்யப் போகிறார்கள் என்பதை இறுதி செய்ய உள்ளனர்.