மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத்திலே தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு முதல் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருகை தந்து வந்தார்.


பிரதமர் சாலை அணிவகுப்பில் குழந்தைகள்:


இந்த நிலையில், நேற்று தமிழகம் வந்த அவர் கோவையில் நடந்த சாலை அணிவகுப்பில் பங்கேற்றார். அவரை பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்திருந்தனர். இந்த நிலையில், அவர் பங்கேற்ற சாலை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக, தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,


தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்:


“பிரதமர் மோடி கோவைக்கு 18.03.2024ம் தேதி பிரதமர் மோடி சாலை அணிவகுப்பில் பங்கேற்றார். பா.ஜ.க. நடத்திய இந்த அரசியல் கட்சி நிகழ்வில் குழந்தைகளை தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தியுள்ளனர். பா.ஜ.க உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரைக்காக 12 வயது முதல் 15 வயது குழந்தைகளை ( பள்ளி மாணவர்கள்) வரையிலான நிர்வாகிகளை பயன்படுத்தியுள்ளனர். 


 அந்த குழந்தைகள் பா.ஜ.க. நடத்திய பிரதமர் மோடி நடத்திய அணிவகுப்பில் கையில் பா.ஜ.க. கொடியேந்தி நின்றிருந்தனர். தேர்தல் ஆணையத்தின் விதிக்கு எதிராக பா.ஜ.க. செயல்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் குழந்தைகளை தேர்தல் தொடர்பான எந்த பணிக்கும் பயன்படுத்தக்கூடாது என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க.விற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


சூடுபிடிக்கும் தேர்தல்:


இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் பிரதமர் மோடியின் அணிவகுப்பில் கையில் பா.ஜ.க. கொடியுடன் இருக்கும் வீடியோவையும் இணைத்துள்ளனர். நேற்று கோவையில் பிரதமர் மோடி சாலை அணிவகுப்பில் பங்கேற்ற நிலையில், இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார், முதல் கட்டத்திலே தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தொடர்ந்து தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.


மேலும் படிக்க: TN BJP Leader: கோயம்புத்தூர் தொகுதியில் களமிறங்கும் அண்ணாமலை? அடுத்த பாஜக தலைவர் யார்?


மேலும் படிக்க:  Lok sabha Elections: பா.ஜ.க. கூட்டணிக்கு போன பா.ம.க! என்ன செய்யப்போகிறார் எடப்பாடி? நிலைமை என்ன?