விஜய் ரஜினி படங்கள் கேரளாவில் பல வருடங்களாக வசூல் ஈட்டு வரும் நிலையில் மலையாள சினிமா இப்போது தான் பிற மாநிலங்களில் வசூல் ரீதியான அங்கீகாரம் பெற்றிருக்கின்றன என்று நடிகர் பிரித்விராஜ் கூறியுள்ளார்,


பிரித்விராஜ்


 நடிகர் பிரித்விராஜ்  நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அமலா பால் , வினீத் ஸ்ரீவின்வாசன் மற்றூம் ஜிம்மி ஜீன் லூயிஸ் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தேசிய விருது வென்ற பிளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்ற இந்தப் படம் தற்போது  தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக சமீப காலங்களில் வெளியான மலையாளப் படங்கள் தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மேல் அதிக கவனம் குவிந்துள்ளது. இது தொடர்பாக ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரித்விராஜ் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.


இது எல்லாருக்குமான வெற்றி






” மலையாளத்தில் வெளியான பிரேமலும் , பிரமயுகம், மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றி அந்த தனிப்பட்ட படங்களின் வெற்றி மட்டும் இல்லை. இது எங்கள் எல்லாருக்குமான வெற்றி . இந்தப் படங்கள் வெற்றிபெற்றதால் தான் அடுத்து வெளியாக இருக்கும் என்னுடைய ஆடு ஜீவிதம் படத்தின் மேல் ரசிகர்களால் நம்பிக்கை வைக்க முடிகிறது. மலையாள சினிமாவைப் பொறுத்தவரை எந்த ஒரு படத்தின் வெற்றி அந்த படக்குழுவின் தனித்த வெற்றி மட்டும் இல்லை. ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்குமான வெற்றி அது.” என்று அவர் கூறினார். 


விஜய் ரஜினி படம் எல்லாம் கேரளாவுல காசு பாக்குது


” இன்று மஞ்சும்மல் பாய்ஸ் படம் 100 கோடி வசூலித்தால் அது ஒரு செய்தியாகிறது இல்லையா. ஆனால் விஜய் , ரஜினி போன்ற பெரிய ஸ்டார்களின் படங்கள் பல வருடங்களாக கேரளாவில் வசூல் ஈட்டி வருகின்றன. இப்போது தான் மலையாள சினிமாவும் தனக்கான பிற மாநில ரசிகர்களையும் அதற்கான சந்தையையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படங்கள் எல்லாம் சிறப்பாக எடுக்கப்பட்ட படங்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. மலையாள சினிமாவிற்கான அங்கீகாரம் கிடைப்பது எனக்கு உண்மையாகவே மகிழ்ச்சியளிக்கிறது” என்று பிரித்விராஜ் மற்றொரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்