Lok sabha Elections 2024: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிற்கு முதல் கட்டத்திலே மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிற்கு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ளது.


பா.ஜ.க.வுடன் கை கோர்த்த பா.ம.க.:


தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது கூட்டணியில் பா.ம.க மற்றும் தே.மு.தி.க.வை கொண்டு வர தொடர் முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இன்று காலை பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணியை உறுதி செய்தது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸின் இந்த முடிவிற்கு பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலருக்குமே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


வட தமிழகத்தில் வாக்கு வங்கியை பலமாக வைத்துள்ள பா.ம.க. தற்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பது அ.தி.மு.க.விற்கு பின்னடைவாக உள்ளது. ஏனென்றால், பா.ம.க.வை தங்கள் பக்கம் கொண்டு வந்தால் வட தமிழகத்தில் தி.மு.க.விற்கு கடும் சவாலை அளிக்கலாம் என்று அ.தி.மு.க. கணக்கிட்டது. ஆனால், தற்போது பா.ம.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால் அ.தி.மு.க. அதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.


அ.தி.மு.க. கூட்டணிக்குள் வருமா தே.மு.தி.க.?


இதைச் சமாளிக்க அ.தி.மு.க. தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.வை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தே.மு.தி.க. தலைவர் மறைந்த விஜயகாந்திற்கு தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வட தமிழகத்திலும் பா.ம.க.விற்கு நிகரான அளவு தே.மு.தி.க.விற்கு தொண்டர்கள் கூட்டம் உள்ளது. விஜயகாந்த் கடந்தாண்டு காலமானதால், தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வருவதால் அனுதாப வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கும் என்று அ.தி.மு.க. தலைமை கருதுகிறது.


இதனால், தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி நாளை உறுதியாகும் என்று கருதப்படுகிறது. பா.ம.க.வினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருப்பது ராமதாஸ் சார்ந்த சமுதாயத்தினர் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால், இந்த முறை வழக்கமாக பா.ம.க.விற்கு கிடைக்கும் வாக்குகள் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


அந்த அதிருப்தியாளர்களை தங்களுக்கு வாக்குகளாக மாற்ற அ.தி.மு.க.வினர் தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்கு இழுத்து ஈடுகட்ட முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க.வின் கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க., கொங்குநாடு மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் என தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது.


எடப்பாடி முன் உள்ள சவால்கள்?


பா.ஜ.க.வின் கூட்டணியில் பெரிய கட்சிகள் ஏதும் இடம்பெறாத நிலையில், பா.ம.க. இன்று காலை கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். இந்த சூழலில், எதிர்க்கட்சியான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் எந்தவொரு பெரிய வெற்றியையும் பெறாத அ.தி.மு.க. இந்த தேர்தலில் சவால் அளிக்கும் வகையில் இடங்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்காக தங்களது கூட்டணியையும் வலுவாக அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


கடந்த தேர்தல்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தது. ஆனால், இந்த முறை சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் எதிர்ப்புகளையும், மாநிலத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஆகியோரை எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இதனால், அ.தி.மு.க. விரைந்து தங்களது கூட்டணிக்குள் தே.மு.தி.க.வை கொண்டு வருமா? அல்லது 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுமா? நடப்பு மக்களவைத் தேர்தலை எடப்பாடியார் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.