நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கூட்டணிகளை இறுதி செய்து, வேட்பாளர்களை முடிவு செய்து அறிவித்து வருகின்றன. இதற்கிடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எதிர்பாராத திருப்பமாக பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தது. தேமுதிகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.


இதற்கிடையில் தமாகா, பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கூட்டணிக் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கன்வே இணைந்துள்ளன. சரத்குமார் தனது கட்சியையே (சமத்துவ மக்கள் கழகம்) பாஜகவில் இணைத்துள்ளார்.


இந்த நிலையில் பாஜக, தமிழகத்துக்கான தனது வேட்பாளர்கள் பட்டியலை இன்று (மார்ச் 19) வெளியிடுவதாக இருந்தது. நேற்று (மார்ச் 18) மாலை பாமக, பாஜகவுடன் இணைந்ததை அடுத்து, வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


கோயம்புத்தூரில் போட்டியிடும் அண்ணாமலை


இதற்கிடையே கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை போட்டியிட உள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.


இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் கூறும்போது, ’’அண்ணாமலை முதலில் கரூர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தார். எனினும் பிறகு கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். கட்சித் தலைமை கூறியதாலேயே அண்ணாமலை தேர்தல் அரசியலில் குதித்துள்ளார்’’ என்று தெரிவித்தன.


வெற்றி வாய்ப்பு எப்படி?


கோவை தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து பெற்ற திமுக இந்த முறை நேரடியாகக் களமிறங்குகிறது. கொங்கு பகுதியில் திமுகவின் செல்வாக்கை நிறுவும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளது. கோவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் ஐ.டி. விங் இணைச் செயலாளரும் தொழிலதிபருமான ஆர்.மகேந்திரன் நிற்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கடந்த மக்களவைத் தேர்தலில் மநீம சார்பில் கோவை தொகுதியில் நின்ற மகேந்திரன், கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர் இம்முறை உதயசூரியன் சின்னத்தில் நின்றால், அண்ணாமலை வெற்றி பெறுவது நிச்சயம் சவாலான ஒன்றாகவே இருக்கும். 


பொதுவாக கட்சி அல்லது ஆட்சி ஏதேனும் ஒன்றில் பொறுப்பு என்பதுதான் பாஜகவின் கொள்கை. அதனால் அண்ணாமலை வெற்றி பெற்று எம்.பி. ஆனால், பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பு மாற்றி அளிக்கப்படுமா என்று கேள்வி எழுகிறது.


பாஜக மாநிலத் தலைவர் யார்?


இதுகுறித்துப் பேசிய பாஜக வட்டாரத்தினர், ''எல்லாவற்றுக்கும் விதிவிலக்குகள் உள்ளன. தெலங்கானாவில் ஜி.கிஷண் ரெட்டி, எம்.பி.ஆன பிறகு மத்திய அமைச்சர் ஆனார். அவர் 3 ஆண்டுகள் பாஜக மாநிலத் தலைவராக இருந்துள்ளார். அதனால் தமிழகத்துக்கு அடுத்த மாநிலத் தலைவர் யார் என்று யோசிக்க வேண்டியதில்லை. அண்ணாமலை வெற்றி பெற்று டெல்லி சென்றாலும், தமிழகத் தலைவராகவும் இருந்து கட்சியை வளர்த்தெடுப்பார்’’ என்று தெரிவித்தனர்.