டிடிவி தினகரனின் அனல் பறக்கும் பரப்புரை:
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் பெரியகுளம் பகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். இதில் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
50, 100க்கு பிரியாணிக்கு வரும் கூட்டம் இது இல்லை- டிடிவி தினகரன்:
மேலும் பிரச்சாரத்தின்போது டிடிவி தினகரன் பேசுகையில், "சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு என் மீது அன்பு மழை பொழிந்து வருகிறீர்கள். பாச மழையில் நனைக்கிறீர்கள். 50, 100 க்கு பிரியாணிக்கு வரும் கூட்டம் இது இல்லை. ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியை தறிகெட்டு ஓட வைத்தது. திமுக கூட்டணிக்கு டெபாசிட் போனது. அந்த வெற்றியை இப்போது தருவீர்கள் நீங்கள். இந்தியாவிற்கு மோடி கடந்த 10 ஆண்டுகளாக நல்ல பல திட்டங்களை தந்தவர்.
டிடிவி தினகரன் சொன்ன போதை கலாச்சாரம்:
அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும். அம்மாவிடம் பெற்ற திட்டங்களை மோடியிடம் மீண்டும் பெற்று தர முடியும். மோடியின் செயல்பாட்டால் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் நாடுகள் பயப்படுகிறது. இரும்பு பெண்மணியாக அம்மா இருந்ததை போல் இரும்பு மனிதராக மோடி உள்ளார். தமிழகத்தில் போதை கலாச்சாரம் குறித்தும் அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார். தற்போது தேர்தல் வேலையால் அதை கை விட்டுள்ளார். என்னைப் பற்றி தவறாக சொல்லிக் கொடுத்து கட்சியில் இருந்து நீக்க வைத்தனர்.
ஒரு சொட்டு கூட மது இல்லாத மாநிலமாக்குவேன் என சொன்ன ஸ்டாலின், தற்போது தமிழகத்தில் போதைப் பழக்கத்தை வளர்த்து வருகிறார். காங்கிரஸ் உடன் கூட்டணியை வைத்து ஒட்டு கேட்கும் திமுக, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கான தண்ணீரை பெற்றுத் தர முடியுமா? அதே போல ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணையின் பிரச்சினையில் கூட்டணியில் உள்ள கேரள கம்யூனிஸ்டு அரசுடன் சுமூக தீர்வை ஏற்படுத்தி தருவாரா ஸ்டாலின்?
குக்கர் விசில் சப்தம் டில்லி வரை ஒலிக்க வேண்டும். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது நமது உறவு உங்கள் வீட்டு பிள்ளையாகிய நான் பல்வேறு தடைகளை தாண்டி, கஷ்டங்களை தாண்டி உங்களிடம் 14 ஆண்டுகள் கழித்து வந்திருக்கிறேன். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்" என பிரச்சாரம் மேற்கொண்டார். பெரியகுளம் பகுதியில் 14 இடங்களில் பிரச்சாரங்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் 10 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்ய நேரம் இருந்ததால் இரவு 10 மணி அளவில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.