விவசாயி, முன்னாள் ஐபிஎஸ், பாஜக மாநிலத் தலைவர் எனப் பல முகங்களைக் கொண்ட அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டி இடுகிறார். அவரின் சொத்து மதிப்பு குறித்துக் காணலாம்.
அண்ணாமலை சொத்து மதிப்பு
அண்ணாமலை பெயரில் அசையும் சொத்து 36 லட்சத்து 4,100 ரூபாயும், அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாயும் உள்ளது. அவரது மனைவி அகிலாவின் பெயரில் 2 கோடியே 3 லட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் அசையும் சொத்தும், 53 லட்ச ரூபாய் அசையா சொத்தும் உள்ளது.
வங்கி கையிருப்பு
ஹெச்டிஎப்சி வங்கி, சென்னை கிளையில் 25 இலட்சத்து 30 ஆயிரத்து 492 ரூபாயும், கனரா வங்கியில் 2,608 ரூபாயும் உள்ளது.
இவரிடம் கையில் ரொக்கமாக 5 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பணமும், இவரது மனைவி அகிலாவிடம் 1 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாயும் உள்ளது. அதேபோல ஷேர் மார்க்கெட்டிலும் அண்ணாமலை முதலீடு செய்துள்ளார்.
அண்ணாமலையிடம் தங்க நகைகள் எதுவுமில்லை. அவரின் மனைவி அகிலாவிடம் 40 பவுன் தங்க நகைகள் உள்ளன.
சுமார் 51 ஏக்கர் நிலம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மொத்தமாக சுமார் 51 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 12 லட்சம் ஆகும். இவரின் மனைவில் அகிலா பெயரில் 53 லட்ச ரூபாய் மதிப்பில் அசையா சொத்து உள்ளது. எனினும் இவை அனைத்தும் பூர்விக நிலங்கள் ஆகும். ஆக மொத்தம் 3 கோடியே 3 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பை அண்ணாமலை வைத்திருக்கிறார்.
24 வழக்குகள்
அண்ணாமலை மீது 24 வழக்குகள் உள்ளன. தனிப்பட்ட வகையில் 2 புகார்கள் உள்ளன. அண்ணாமலை 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி கார் (2017) வைத்துள்ளார்.
அதே நேரத்தில் கடைகள், வணிக கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துகள் எதுவும் அண்ணாமலைக்கு இல்லை. அதேபோல கடன் எதுவும் அவருக்கு இல்லை.
வருவாய் ஆதாரம் என்ன?
வருவாய்க்கான ஆதாரமாக தனியார் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பு, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார். இந்த தகவல்களை வேட்பு மனுத்தாக்கல் செய்த போது அளித்த பிரமாணப் பத்திரத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை இன்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் முன்னிலையில் கோவை தொகுதியில் போட்டியிட இன்று மனுத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.