நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் இன்று முதல் தொடங்கவுள்ளது.
நெருங்கும் வாக்குப்பதிவு நாள்
இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. அதேசமயம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமான ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவானது நடக்கிறது.
ஒரு பக்கம் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் மறுபக்கம் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.
தபால் வாக்குகள்
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் பிற மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த பணியானது இன்று தொடங்குகிறது.
சென்னையை பொறுத்தவரை அம்மாவட்டத்துக்குட்பட்ட 3 தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாக 11, 369 பேரும், 85 வயதுக்குட்பட்ட வாக்காளர்களாக 63,751 பேரும் உள்ளனர். மொத்தமாக 75, 120 பேர் இருக்கும் நிலையில் இவர்களில் 4,538 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்காக மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தபால் வாக்களிக்கும் வகையிலான 12 டி படிவத்தை வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்கினர். பின்னர் நிரப்பப்பட்ட படிவங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த 4, 538 பேரிடமும் தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது இன்று முதல் நடைபெற உள்ளது. 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பணியில் மொத்தம் 67 குழுக்கள் ஈடுபடுகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது வீடு, வீடாக மேற்கொள்ளப்படுகிறது. தபால் வாக்கு சீட்டினை அதிகாரிகள் வழங்கி, எப்படி வாக்களிப்பது என எடுத்துக்கூறி, பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவை திரும்ப பெறப்படுகிறது. 67 குழுவிலும் ஒரு குழுவுக்கு 4 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: PM Modi: பிரதமர் மோடியின் தமிழக பயணத்தில் திடீர் மாற்றம்..! 5 அடுக்கு பாதுகாப்பு, 22,000 போலீசார் குவிப்பு