PM Modi: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருவதை முன்னிட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முக்கிய பகுதியான வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. அதில், முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியான நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க நாளை மீண்டும் தமிழகம் வருகிறார்.
7வது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி:
தேர்தலையொட்டி பிரதமர் மோடி நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தே, தமிழகத்திற்கு அடிக்கடி பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே 6 முறை தமிழ்நாட்டிற்கு பயணம் செய்து, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியதோடு, பாஜக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார். அதன் தொடர்ச்சியாக, ஏழாவது முறையாக பிரதமர் மோடி நாளை தமிழகம் வர உள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், அந்த பயணத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மோடியின் 2 நாள் பயண விவரம்:
- உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபிட் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, நாளை பிற்பகல் 2.45 மணிக்கு பிரதமர் மோடி கேரள மாநிலம் பாலக்காடு சென்றடைகிறார்
- அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு மாலை 6.30 மணிக்கு வருகிறார்
- விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம், ஜி.என்.டி., சாலை வழியாக பனகல் பார்க் செல்கிறார்
- அங்கு தொண்டர்களின் வரவேற்பை ஏற்கும் மோடி தொடர்ந்து ரோட் ஷோவில் பங்கேற்று, பாஜக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னையில் போட்டியிடும் பால்கனகராஜ் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் வினோஜ் செல்வம் ஆகியோருகாக வாக்கு சேகரிக்க உள்ளார்.
- ரோட் ஷோவுடன் நாளைய பயண திட்டம் முடிய, இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒய்வெடுக்கிறார்
- புதன்கிழமை காலை சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்து வேலூர் சென்றடைகிறார்
- கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்
- அங்கிருந்து பிற்பகல் 1.45 மணியளவில் மேட்டுப்பாளையம் சென்றடைகிறார்.
- அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரான எல்.முருகனுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
- இறுதியாக கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து மகாராஷ்டிராவிற்கு புறப்படுகிறார். அத்துடன் மோடியின் இரண்டு நாள் தமிழக பயணம் நிறைவடைகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
- சென்னையில் பிரதமர் மோடி செல்ல இருக்கும் அனைத்து பகுதிகளும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன
- ரோட்-ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர்
- விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள கடை ஊழியர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன
- 144 தடை சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
- தியாகராய நகர் மற்றும் ஆளுநர் மாளிகையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- பிரதமரின் பாதுகாப்பு பணிகளுக்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்