நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய முதல் கட்ட தேர்தலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.


5ம் கட்ட மக்களவைத் தேர்தல்:


இந்த நிலையில், 5வது கட்டமாக நாளை நாட்டில் உள்ள பல தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதுதவிர, ஒடிசா மாநிலத்தில் உள்ள 35 சட்டசபைத் தொதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள 5ம் கட்ட மக்களவைத் தேர்தலில் மட்டும் 8.95 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 4.69 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 4.26 கோடி பேர் பெண் வாக்காளர்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 5 ஆயிரத்து 409 வாக்காளர்கள் ஆவார்கள்.


இந்த வாக்காளர்களில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7.81 லட்சம் வாக்காளர்கள் ஆவார்கள். 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் 24 ஆயிரத்து 792  பேர் ஆவார்கள். நாளைய தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான மாற்றுத்திறனாளிகள் 7.03 லட்சம் வாக்காளர்கள் ஆவார்கள். நான்காம் கட்ட தேர்தலில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், நாளைய தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாகும் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கையுடன் உள்ளது.


சோதனைகள், கண்காணிப்பு தீவிரம்:


வாக்குப்பதிவு நாளை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெற உள்ள சர்வதேச எல்லையில் அமைந்துள்ள 216 சோதனைச் சாவடி, மாநிலங்களுக்கு இடையேயான 565  சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. பணம், மது என உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் அனைத்தும் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது.


இந்த 5ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  மேலும் ஜம்மு – காஷ்மீர், லடாக்கிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் நாட்டில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


அமேதி, ரேபரேலி:


நாளை வாக்குப்பதிவு நடைபெறும் முக்கிய தொகுதிகளில் அமேதி, ரேபரேலி தொகுதி உள்ளது. சோனியாகாந்தி குடும்பத்திற்கு நெருக்கமான இந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற ஆர்வம் காட்டும். அமேதி தொகுதியில் கே.எல்.சர்மாவும், ரேபரேலியில் ராகுல் காந்தியும் காங்கிரஸ் சார்பில் களமிறங்குகின்றனர். 7 கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நிறைவு பெற்ற பிறகு, மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதமான ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. 


மேலும் படிக்க: INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? உத்தவ் தாக்கரே அறிவிப்பு.. ஷாக்கான பாஜக!


மேலும் படிக்க: Fact Check: பிரதமர் மோடியின் திருமண புகைப்படம் - இணையத்தில் பரவுவது உண்மையா?