INDIA Alliance PM Candidate: இந்தியாவை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான விடை மக்களவை தேர்தல் முடிவுகள் வழியாக கிடைத்துவிடும். வரும் ஜூன் 4ஆம் தேதி, தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.


கடந்த 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி (நாளை மறுநாள்) 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


பொதுக்கூட்டத்தில் ரகசியம் உடைத்த உத்தவ் தாக்கரே:


மகாராஷ்டிரா, மேற்குவங்கம், கர்நாடக, ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


அப்போது பேசிய மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "இந்தியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்த பலர் உள்ளனர்.


இது தொடர்பாக கூட்டணிக்குள் ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதை இப்போது தெரிவிக்க விரும்பவில்லை" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கமாகும்" என்றார்.


இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?


இந்தியா கூட்டணி என்பது வெவ்வேறு தலைவர்களைக் கொண்ட பிளவுபட்ட வீடு என்றும் பலர் பலதரப்பட்ட முழக்கங்களை எழுப்பி வருவதாகவும் பிரதமர் பதவிக்கு பலர் குறிவைத்து வருவதாகவும் மோடி விமர்சித்திருந்தார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஐந்தாண்டுகளில் 5 பிரதமர்கள் இருப்பார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய உத்தவ் தாக்கரே, "இந்தியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு பலர் தகுதி பெற்றுள்ளனர் என்பதை மோடி குறைந்தபட்சம் ஒப்புக்கொண்டார். ஆனால், பாஜகவில் பிரதமர் பதவிக்கு வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது.


ஒரே முகத்தை எத்தனை முறை பாஜக முன்னிறுத்தப் போகிறது? இந்தியாவுக்கு பல முகங்கள் இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் 5 பிரதமர்களை தருவோம் என்றும் கூறியதன் மூலம், அந்தப் பதவிக்குத் தகுதியான பல முகங்கள் எங்களிடம் இருக்கிறோம். நாங்கள் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்றும் பிரதமர் ஒப்புக்கொண்டார்" என்றார்.


தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "முதலில், எங்கள் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது என மோடி கூறினார். இப்போது இது ஒரு மாவோயிஸ்ட் தேர்தல் அறிக்கை என்று கூறுகிறார். அவர் சரியாக என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை முதலில் அவர் தீர்மானிக்க வேண்டும்.


குறைந்தபட்ச ஆதரவு விலை, ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற அவர்களின் உறுதிமொழிகளை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்களா என்பதை அவர்கள் முதலில் நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். எல்லா மக்களையும் எப்போதும் ஏமாற்ற முடியாது" என்றார்.