Fact Check: பிரதமர் மோடியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்டதாக பரவும், புகைப்படத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடியின் திருமண புகைப்படம்?


“திருமணத்தை மறைத்த திருடனின் திருமண புகைப்படம்.. நல்லாருந்த பல கோடி இந்திய மக்களை ஏழையாக்கிய திருடன்”  என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள பலர், ”தேர்தல் பிரமாண பத்திரத்தில் தன் திருமணத்தயே மறைத்தவன் மோடி, நீ எதுக்காக திருமணத்தை மறச்ச? உனக்கு பொண்ணு பிடிக்காதா? ஒஹோ அவனா நீ?” போன்ற வாசகங்களை குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதையடுத்து புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.




       இணையத்தில் வைரலாகும் தவறான புகைப்படம்


புகைப்படத்தின் உண்மைத்தன்மை என்ன?


பிரதமர் மோடியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்டது என்று வைரலான புகைப்படத்தை,  ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம். இத்தேடலில் ஏபிவிபியின் தேசியச் செயலாளர் ஆஷிஷ் சௌகான் வைரலாகும் படம் மோடியின் திருமணப் படமல்ல என தெளிவுப்படுத்தி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. வைரலாகும் படத்தில் மோடியின் அருகிலிப்பவர் குஜராத்தின் முன்னாள் அமைச்சர் ஹேமந்த் சப்பத்வாலாவின் மகள் என்று அவர் விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து தேடுகையில் குஜராத் ஒபிசி அணியின் முன்னாள் தலைவரும், ஹேமந்த் சப்பத்வாலாவின் மகனுமான கேயூர் வைரலாகும் படம் 1994 ஆம் ஆண்டில் தனது சகோதரி ஆல்பாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்டது என்று தெளிவுப்படுத்தி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.




                    இணையத்தில் வைரலாகும் புகைப்படம் தொடர்பான விளக்கம்


தீர்ப்பு: 


பிரதமர் மோடியின் திருமண படம் என்று வைரலாகும் படம் உண்மையில் குஜராத் முன்னாள் அமைச்சர் ஹேமந்த் சப்பத்வாலாவின் மகளின் திருமணத்தில் எடுக்கப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே பொதுமக்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.


ALSO READ: பிரதமர் மோடியின் திருமண படமா இது?


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.