Prices End With 9: வணிக தளங்களில் பெரும்பாலான பொருட்களின் விலை 9 என முடிவடைவது, ஒரு வியாபார தந்திரம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.


பொருட்களின் விலை 9 என முடிவதற்கான காரணங்கள் என்ன?


இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும், கடைகளுக்கு சென்று பல கோடி பொருட்களை வாங்குகின்றனர். அவற்றின் விலைகள் பெரும்பாலும் 9 அல்லது 99 அல்லது 999 என 9 என்ற இலக்கத்துடனேயே முடிவடைவதை காண முடியும். அந்த பொருட்களின் விலைகள் ஏன் இப்படி நிர்ணயம் செய்யப்படுகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. உண்மையில் இது ஒரு வியாபார தந்திரம். சந்தையாளர்கள் வாங்குபவர்களுடன் விளையாடும் ஒரு மன விளையாட்டு. 


பேட்டா செருப்புகளின் விலையை கவனித்தீர்களா?


பேட்டா நிறுவன செருப்புகளின் விலையை கவனித்தால் கூட பெரும்பாலும்,  ரூ.299.99 அல்லது ரூ.399.99 அல்லது ரூ.159.9 என முடிவடைவதை காண முடியும். விலையின் இறுதியில் எண் 9 கட்டாயம் இடம்பெறும் சூத்திரம் முதலில் பாட்டா நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் இது பேட்டா விலை நிர்ணயம் என்றும் அழைக்கப்படுகிறது.


பேட்டா நிறுவன லாஜிக் தெரியுமா?


உதாரணமாக ஒரு பொருளின் விலை ரூ. 199 என்று வைத்துக்கொள்வோம். இது ரூ.200-ஐ காட்டிலும் ஒரு ரூபாய் தான் குறைவு.  ஆனால், ரூ.199ஐப் பார்க்கும்போது அடடே ​ரூ.200-ஐ விட மிகக் குறைவு என்று பிரமை நமது மனதை ஆட்கொள்கிறது. யூசி பெர்க்லி ஆய்வின்படி, ஒரு பொருள்  ரூ. 200க்கு விற்கப்பட்டதை விட, ரூ.199-க்கு விற்பனை செய்யப்படும்போது 3 முதல் 5 சதவிகிதம் கூடுதலாக விற்பனை செய்கிறது. ரூ. 200 விட ரூ. 199 என்ற எண் மிகவும் குறைவாக இருப்பதாக நமது மூளை நினைப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று பெர்க்லி தெரிவித்தார்.  ஒரு எண்ணின் இடதுபுற இலக்கத்தைப் பார்த்து முடிவெடுப்பது இடது இலக்க சார்பு என்று அழைக்கப்படுகிறது. இடது இலக்கச் சார்பு நம் நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள வணிகர்களுக்கு லாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறது. 


ஆய்வு சொல்வது என்ன?


ஒரு மளிகைக் கடையில் ரூ.99, ரூ.199, ரூ.999 போன்ற விலையுள்ள பொருட்கள், ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.1000 விலையில் விற்கப்படும் பொருட்களை விட அதிகமாக விற்கப்படுகிறது. காரணம் 9 என்ற இலக்குடன் முடிவடையும் விலை தான் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். வணிகர் 4 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்கும். 


இங்கே, ஒரு காரையும் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். 80,000 கிலோமீட்டர்கள் ஓடிய காரை விட,  79 ஆயிரத்து 999 கிலோமீட்டர்கள் ஓடிய கார் என சொன்னால் அது செகண்ட் ஹேண்டிலும் அதிக விலைக்கு விற்பனையாவதாக டொராண்டோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு 10,000 கிலோமீட்டருக்கும் இது பொருந்தும் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. நீங்களும் உங்கள் காரை விற்க நினைத்தால், ஸ்பீடோமீட்டரில் கடைசி எண் 9 என்பதை உறுதி செய்து விற்றால் அதிக பணம் பெறலாம் என வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.


நீங்கள் ஆன்லைனில் விற்க நினைக்கும் ஏதேனும் ஒரு பொருளின் விலை ரூ. 2,000 என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதன் விலையை ரூ. 1,999 என நிர்ணயித்தால்,  ரூ. 2,000க்கும் குறைவான தயாரிப்புகளுக்கான ஆன்லைன் தேடல்களில் உங்கள் பொருளும் பட்டியலிடப்படும். இது உங்களது பொருளின் விற்பனைக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.