மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக நேற்று 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 


தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக நேற்று 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர் ராஜு ஹலகுருவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். 


முதலாளிகளுக்கே, விவசாயிகளுக்கு அல்ல:


அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி முதலாளிகளின் கடனைத்தான் தள்ளுபடி செய்தார். விவசாயிகளின் கடனை அல்ல. சுவாமிநாதன் அறிக்கைப்படி, விவசாயிகளுக்கான ஆதரவு கிடைக்கவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ரூ.72 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். நான் முதல்வராக பதவியேற்ற பின் 27 லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளேன். அதாவது ரூ.8,165 கோடி கடன்களை தள்ளுபடி செய்தேன். 


16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி:


ஆனால் பிரதமர் மோடி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் இதுவரை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததே இல்லை. ஆனால் அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் கடன்களை ரூ. 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். 


பாஜகவினர் அரசியலமைப்பு சட்டடத்திற்கு எதிரானவர்கள். சமூக நீதிக்கு எதிரானவர்கள். ஏழைகளுக்கு எதிரானவர்கள். பிரதமர் மோடி இந்த தேர்தலில் தோல்வி அடைவார். அவரை மாற்ற காங்கிரஸ் இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். சமூகத்தில் சமத்துவம் இருக்கக்கூடாது என பாஜக நினைக்கிறது” என்றார்.


கர்நாடகாவில் தற்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த பா.ஜ.க. மக்களவைத் தேர்தலில் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே கர்நாடகாவில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க: UP Jai Shri Ram: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்


மேலும் படிக்க: "அடுத்த ஜென்மத்தில் வங்க தாயின் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன்" - பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!