Black Man Dies: போலீசாரால் கைது செய்யப்பட்ட பின் உயிரிழந்த நபர், என்னால் சுவாசிக்க முடியவில்லை என கூச்சலிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மீண்டும் ஒரு கருப்பர் மரணம்:
கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவில் போலீசார், ஜார்ஜ் பிளாய்ட் எனும் கருப்பர் ஒருவரை கைது செய்தனர். அப்போது, அவரை தரையில் தள்ளி அவரது கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார். தன்னால் சுவாசிக்க முடியவில்லை என பலமுறை கூச்சலிட்டும், அவரது கழுத்தில் இருந்து போலீசார் காலை எடுக்கவில்லை. இதனால், ஜார்ஜ் பிளாய்ட் மூச்சுதிணறி உயிரிழந்தார். நிறவெறியால் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதாக, சர்வதேச அரங்கில் இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் தான், அமெரிக்காவில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மேலும் ஒரு கருப்பர், மூச்சு திணறலுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கைதிக்கு மூச்சு திணறல்:
ஏப்ரல் 18 அன்று கார் விபத்து ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட, பிராங்க் டைசன் எனும் 53 வயதான நபரை பார் ஒன்றில் வைத்து கான்டன் போலீசார் கைது செய்ய முற்பட்டனர். ஆனால், அந்த நபர் தான் தவறிழைக்கவில்லை என கூறி முழக்கமிட தொடங்கினர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அந்த நபரை குண்டுக்கட்டாக பாரில் இருந்து வெளியே தூக்கி வந்தனர். தொடர்ந்து அந்த நபரின் மார்புப் பகுதி தரையை நோக்கியாவாறு இரும்படி படுக்கச் செய்தனர். மேலும், அந்த நபரின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தி, கைகளில் விலங்கிட்டுள்ளனர். இதனிடையே, அந்த நபர் தன்னால் சுவாசிக்க முடியவில்லை, என்னால் முடியவில்லை என பல முறை கூக்குரலிட்டுள்ளார். அதனை சிறிதும் பொருட்படுத்தாத போலீசார், பிராங்க் டைசனின் கைகளில் விலங்கிட்டுள்ளனர். மேலும், நீங்கள் நன்றாக தான் இருக்கின்றனர் எனவும் கூறியுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி மரணம்:
கைது நடவடிக்கைக்குப் பின், பிராங்க் டைசன் தரையில் இருந்து எழ முடியாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். சில நிமிடங்களுக்குப் பிறகு போலீசாரே அவருக்கு முதலுதவியும் அளித்துள்ளனர். ஆனால், அதில் எந்த பலனும் இல்லாததால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிராங்க் டைசன் உயிரிழந்துள்ளார். இந்த கைது நடவடிக்கை தொடர்பான வீடியோக்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாக, ஒஹியோ காவல்துறையும் போலீசாரின் உடல் கேமராவில் பதிவான காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளன.
மீண்டும் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்..
கடந்த 2020ம் ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்ததே, பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்ற பெயரில் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே பாணியில் மேலும் ஒரு கருப்பர் உயிரிழந்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிராங்க் டைசனை கைது செய்த காவல் துறை அதிகாரிகளான, பியூ ஸ்கோனெக் மற்றும் கேம்டன் புர்ச் ஆகியோர் நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையையும் தொடங்கியுள்ளது. ஜார்ஜ் பிளாய்ட் வழக்கில், 3 போலீசார் ஆணவக் கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.