UP Jai Shri Ram: உத்தரபிரதேசத்தில் அரசு பல்கலைக்கழக தேர்வில், ஜெய் ஸ்ரீராம், பாடல் வரிகள் போன்றவை எழுதப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்கள் தேர்ச்சி:
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் அரசு நடத்தும் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் தேர்வில், முதலாம் ஆண்டு மாணவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை விடைத்தாளில் எழுதியுள்ளனர். அதை திருத்திய ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு பாஸ் மார்க்கும் போட்டுள்ளனர். அதோடு, பாடல்கள், இசை வரிகள் மற்றும் மத வாசகங்களுடன் எழுதப்பட்ட விடைத்தாள்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அம்பலமான நிலையில், பணம் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கியதாக இரண்டு பேராசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இணையத்தில் வைரலாகும் விடைத்தாளில், “பார்மசி ஒரு தொழில்' என்ற பதிலின் நடுவில் ஜெய் ஸ்ரீ ராம் என எழுதப்பட்டுள்ளது. மேலும் ஹர்திக் பாண்ட்யா, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற கிரிக்கெட் வீரர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
”0” மதிப்பெண் பெற்றாலும் பாஸ்..
மாணவர் தலைவர் திவ்யன்சு சிங் சார்பில், பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோருக்கு கடிதம் எழுப்பப்பட்டுள்ளது. அதில், “ பல்கலை அதிகாரிகள் சிலரின் துணையுடன், பூஜ்ஜிய மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட, 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றதாக” குற்றம் சாட்டியுள்ளார். ஆர்டிஐ மூலமாக விடைத்தாள்களை சிறப்பு மதிப்பீடு செய்தபோது முறைகேடுகள் கண்டறியப்பட்டன, மறுமதிப்பீட்டின் போது மதிப்பெண்களில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகள் ஏற்பட்டதன் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர் சொன்ன விளக்கம்:
இதுதொடர்பாக பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர், ”மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் நாங்கள் ஒரு குழுவை அமைத்தோம். அந்த கமிட்டி தனது அறிக்கையில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது" என்றார். மத வாசகங்கள் பற்றி கேட்டதற்கு, "ஜெய் ஸ்ரீ ராம் பதில்கள் கொண்ட நகலைப் பார்க்கவில்லை. ஆனால் ஒரு நகலைப் பார்த்தேன், அதில் மாணவரின் கையெழுத்து தெளிவாக இல்லை. ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. தேர்தல் விதிகள் நீக்கப்பட்டவுடன் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் துணை வேந்தர் விளக்கமளித்துள்ளார். வடமாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு முறைகேடு என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட முறைகேட்டை குறிப்பிட்டு, காவல்துறை பணிகளுக்கான தேர்வை உத்தரபிரதேச அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.