இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.


மம்தாவின் கோட்டையாக கருதப்படும் மேற்குவங்கத்தில் கடந்த முறை போன்று இந்த முறையும் கணிசமான தொகுதிகளில் வெல்ல பாஜக முயற்சி செய்து வருகிறது. இதற்காக பாஜக தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


உருக்கமாக பேசிய பிரதமர் மோடி:


அதன் தொடர்ச்சியாக, மால்தா நகரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அடுத்த ஜென்மத்தில் வங்க தாயின் பிள்ளையாக பிறக்க விரும்புகிறேன் என்றார். தொடர்ந்து உருக்கமாக பேசிய அவர், "உங்கள் அனைவருடனும் மேற்கு வங்கத்துடனும் எனக்கு ஆழமான தொடர்பு இருப்பதாக நான் நினைக்கும் அளவுக்கு அன்பைப் பொழிகிறீர்கள்.


நான் எனது கடந்த ஜென்மத்தில் இங்கு பிறந்தது போல் உணர்கிறேன். வரும் ஜென்மத்திலாவது ஒரு வங்க தாயின் குழந்தையாக இங்கு பிறக்க விரும்புகிறேன். மக்களாகிய நீங்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் கூடியுள்ளீர்கள். பலர் வெப்பத்தாலும், கூட்டத்தாலும் அவதியுறுகிறார்கள். ஆனால், இன்னும் என் பின்னால் வலுவாக நிற்கிறீர்கள். எனக்கு பிரமிப்பாக உள்ளது" என்றார்.


திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய பிரதமர், "திரிணாமுல் காங்கிரஸும், காங்கிரஸும் மாநிலத்தில் சண்டையிட்டு கொள்வது போல் பாசாங்கு செய்கின்றன. ஆனால், உண்மை என்னவென்றால், அந்த இரு கட்சிகளின் தன்மையும் சித்தாந்தமும் ஒன்றுதான்.


"ஏழை மக்களின் சொத்துக்களை ஆராய போகும் காங்கிரஸ்"


சமரச அரசியல். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே பொதுவான விஷயம். அதற்காக அவர்கள் எதையும் செய்வார்கள். நம் நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள்.


அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை இந்தியா கூட்டணி திரும்பப் பெற விரும்புகிறது. சிஏஏவை ஒழிப்பதாக திரிணாமுல் கூறுகிறது. சிஏஏவின் பல பயனாளிகளில் தலித்துகளும் அடங்குவர். சமரச அரசியலுக்காக திரிணாமுலம் காங்கிரசும் அவர்களை நிராகரிக்க விரும்புகின்றன" என்றார்.


தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "ஏழை மக்களின் அனைத்து சொத்துக்களையும் ஆராய போகிறோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து எக்ஸ்ரே மெஷினை கொண்டு வந்து, நாட்டில் உள்ள அனைவருக்கும் எக்ஸ்ரே எடுப்பார்கள்.


நகை, சொத்து உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி, அதில் ஒரு பகுதியை தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுக்க நினைக்கின்றனர். ஆனால், அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் திரிணாமுல் அமைதியாக இருந்து ஆதரவு அளித்து வருகிறது" என்றார்.