மக்களவைத் தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்தலில் முதல் கட்டத்திலே வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க. தனது கூட்டணி பங்கீட்டை இறுதி செய்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இதுவரை கூட்டணி பங்கீட்டை உறுதி செய்யவில்லை.


40 தொகுதிகளுக்கும் விருப்பமனு:


அ.தி.மு.க. தனது கூட்டணியில் பா.ம.க.வையும், தே.மு.தி.க.வையும் இடம்பெற தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், இதுவரை எதுவும் உறுதியாகவில்லை. இந்த நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு பெறுவதாக அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “ 18வது மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்பும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் விருப்ப மனுக்களை வரும் 19ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை 11 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வரும் 20ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


21ம் தேதி நேர்காணல்:


மக்களவைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். பாராளுமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.


மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வரும் 21ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும்.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


அ.தி.மு.க. தலைவர்கள் தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், தே.மு.தி.க. தற்போது 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு பெறுவதாக அறிவித்திருப்பது, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட விரும்புகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  


40 தொகுதிகளிலும் விருப்பமனுக்களை பெறுவதன் மூலமாக அ.தி.மு.க.விடம் தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை கேட்டுப் பெற முடியும் என்று தே.மு.தி.க. வியூகம் வகுத்துள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


மேலும் படிக்க: Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் - எப்படி நடைபெறும்? விதிகளும், நடைமுறைகளும் என்ன?


மேலும் படிக்க:New Voter ID: மக்களவை தேர்தலில் ஓட்டு போட விருப்பமா..? ஓட்டர் ஐடி இல்லையா? அப்போ! இதை செய்யுங்க!