Lok Sabha Election Process: இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான விதிமுறைகளும், வழிமுறைகளும் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்:


நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டில் இருந்தே அரசியல் கட்சிகள், மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி அமைப்பது, தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது, வேட்பாளர்களை அறிவிப்பது போன்ற பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதன் காரணமாக நாடு முழுவதும் தேர்தல் காய்ச்சல் அனல் பறக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான, இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை அறிய, நாட்டு குடிமக்கள் மட்டுமின்றி, இந்திய சந்தையை குறிவைக்கும் ஒட்டுமொத்த உலக நாடுகளுமே எதிர்நோக்கி உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் மக்களவை தேர்தல் எப்படி நடைபெறும், வழிமுறைகள் மற்றும் விதிகள் என்ன என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.


தேர்தல் தேதியும், நடத்தை விதிகளும்: 


இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு, தேர்தல் தேதிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதுமே தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, நலத்திட்டங்கள் தொடர்பான எந்தவொரு அறிவிப்பையும், மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிடக் கூடாது.  உரிய ஆவணங்கள் இன்றி பணம், நகை போன்றவற்றை எடுத்து சென்றால் பறிமுதல் செய்வது உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்படும்.


தேர்தல் நடைமுறைகள்:


மனுதாக்கல்: வரும் மார்ச் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை, தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள நபர்கள் வேட்புமனுதாக்கல் செய்யலாம். உரிய ஆவணங்களுடன் ஒரு கட்சி சார்பில் மட்டுமின்றி, சுயேச்சையாகவும் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். 


வேட்புமனு பரிசீலனை: மனுதாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிந்த பிறகு, மார்ச் 28ம் ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.  ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு  வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். சரிபார்த்தலின் போது விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படாவிட்டாலும், உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சமர்க்கப்படவிட்டாலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும்.


இறுதி வேட்பாளர் பட்டியல்: வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். அதைதொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 


தேர்தல் பரப்புரை: இதனிடையே, தேர்தல் பரப்புரை ஒவ்வொரு தொகுதியின் மூலைமுடுக்கெல்லாம் களைகட்ட தொடங்கும். ஆனால், வாக்குப்பதிவு நடைபெறும் ஒருநாளுக்கு முன்னதாகவே பரப்புரையை முற்றிலும் முடித்துக்கொள்ள வேண்டும். அதேநாளில் தொகுதியை சாராத நபர்கள், அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.


வாக்குப்பதிவு: மாநிலத்தின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து அந்த வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்படும்.


தேர்தல் முடிவுகள்: தொடர்ந்து நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, ஜுன் 4ம் தேதி மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும்.