ஆரவாரத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்த டிடிவி:
வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று இறுதி நாளானதால் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். குறிப்பாக 12 மணிக்கு திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பாஜகவின் கூட்டணி கட்சி சார்பில் அமமுக சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் வந்து தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.
டிடிவி ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம்:
டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கட்சி நிர்வாகிகளுடன் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்துகொண்டிருந்தார். ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு வந்தபோது போலீசாருக்கும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. டிடிவி தினகரனின் பிரச்சார வாகனத்தில் குறிப்பிட்ட ஆட்களுக்கு மேல் அதிகமான ஆட்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சி செய்ததால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்களின் எண்ணிக்கையை குறைத்த பின்னர் டிடிவி ஆட்சியர் அலுவலகத்திற்குள் தனது பிரச்சார வாகனத்தில் சென்றார்.
டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பே ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்சின் மகன் தற்போதைய தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்குமார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தனர்.
செய்தியாளர் சந்திப்பு :
இந்த நிலையில் டிடிவி தினகரன் தனது வேட்பு மனுவை தேனி மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தங்க தமிழ்செல்வன் தோல்வி பயத்தில் அதிகமாக உளற ஆரம்பித்துவிட்டார். அவர் தன்னை பற்றி பேசுவதற்கெல்லாம் தான் பதிலளிக்க வேண்டாமென நினைப்பதாகவும், தான் தேர்தலில் நிற்பதற்கான மன நிலை இல்லை தற்போதிருக்க கூடிய தேனி எம்பி ரவீந்திரனாத் மற்றும் அவரது அப்பா ஓபிஎஸ்ம் கேட்டுக்கொண்டதால் மட்டுமே தான் தேனி தொகுதியில் போட்டியிடுவதாகவும், தான் ஏற்கனவே தேனி மக்களுக்கு பரிட்சியமானவர் என்றும் ஜெயலலிதாவிடம் கேட்டு தேனி தொகுதிக்கு நிறைய நல்லது செய்திருப்பதாகவும் , தான் தேனி மக்களுக்கு செய்தது மக்களும் நன்கு அறிவார்கள் எனவே தான் மீண்டும் தேனி தொகுதியில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றுவேன் எனவும் கூறினார்.