இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2024 மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. 


ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 


சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளும் அறிவிப்பு


அதேபோல அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் விளவங்கோடு உள்ளிட்ட 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.


7 கட்டத் தேர்தல்கள் எப்போது?


இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் 3ஆம் கட்டமாக மே 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. நான்காம் கட்டத் தேர்தல் மே 13, 5ஆம் கட்டத் தேர்தல் மே 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதேபோல 6ஆவது கட்டத் தேர்தல் மே 26ஆம் தேதியும் கடைசியாக 7ஆம் கட்டத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 


மக்களவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்.எஸ்.சாந்து ஆகியோர் கூட்டாக இணைந்து அறிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


55 லட்சம் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்


தேர்தல் குறித்து ஆணையர் ராஜீவ் குமார் மேலும் கூறியதாவது:


’’2024-ல் 60 நாடுகளில் தேர்வு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் தேர்தலுக்கான ஆண்டு. தேர்தல் பணிகளில் 1.5 கோடி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். 55 லட்சம் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 10.5 லட்சம் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ளன. வன்முறை இல்லாமல் மிகவும் அமைதியாக தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 


இந்த முறை 96.88 கோடி பேர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடி ஆகும். அதேபோல முதல் தலைமுறை வாக்காளர்கள் 1.82 கோடி பேராக உள்ளனர்.




தேர்தல் ஆணையத்தின் முன் உள்ள 4 சவால்கள்


பண பலம், ஆள் பலம், வதந்திகள், விதிமீறல்கள் ஆகிய 4 சவால்கள் தேர்தல் ஆணையத்தின் முன் உள்ளன. ட்ரோன்கள் மூலம் மாநில எல்லைகள் கண்காணிக்கப்படும். பணப் பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறையினர், அமலாக்கத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பர்.


பாரபட்சமாகச் செயல்படும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர். அண்மையில் நடந்து முடிந்த 11 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ரூ.3,400 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.’’


இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 


இதையும் வாசிக்கலாம்: Lok Sabha Election 2024 Dates LIVE: 97 கோடி வாக்காளர்கள்; 55 லட்சம் மின்னணு இயந்திரங்கள் - தலைமை தேர்தல் ஆணையர்