இயேசு கிறிஸ்து குறித்து தவறான கருத்து குறித்த இசையமைப்பாளரும்,நடிகருமான விஜய் ஆண்டனிக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி தற்போது ரோமியோ என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மிருனாளினி ரவி, யோகி பாபு, இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, தலைவாசல் விஜய், விடிவி கணேஷ் என பலரும் நடித்திருக்க விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். இந்த படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. 


இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் ரோமியோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி பேசியது சர்ச்சையானது. அதில் ரோமியோ பட போஸ்டரில் பெண் மது பாட்டிலை கையில் வைத்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றது. அது பற்றிய கேள்விக்கு, ‘ குடி என்றால் எல்லாருக்கும் ஒன்று தான். இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு எல்லாம் இல்லை. ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான். குடி என்பது நீண்ட காலமாகவே உள்ளது. ஜீசஸ் கூட திராட்சை ரசம் என்ற பெயரில் மது குடித்திருக்கிறார். அது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு பெயராக உள்ளது’ என தெரிவித்தார். 


விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் அவரின் பேச்சுக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு தலைவர் பிலிப் நெல்சன் லியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகமெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும், ஜாதி மதம் மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினாலும் போற்றக்கூடியவர் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களையும், இயேசு கிறிஸ்துவையும் இழிவுப்படுத்தும் விதமாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என பொது வெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: Vijay Antony: “ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு.. மது நீண்ட நாட்களாகவே இருக்கு” - விஜய் ஆண்டனி சர்ச்சை பேச்சு