மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தாண்டு பிறந்தது முதலே அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க.வும், 10 ஆண்டுகளாக இழந்த ஆட்சியை இந்த முறை எப்படியாவது கைப்பற்றித் தீர வேண்டும் என்று காங்கிரசும் இந்தியா கூட்டணியை அமைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறது.
மக்களவைத் தேர்தல்:
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி இன்னும் சில மாநிலங்களில் தங்களது கூட்டணி பங்கீட்டை இறுதி செய்யவில்லை. இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் பெரும் பலமான சோனியா காந்தி போட்டியிடவில்லை. அவர் முதன்முறையாக மாநிலங்களவையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
கார்கே போட்டியா? இல்லையா?
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே இந்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, டெல்லியில் நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது, பத்திரிகையாளர்கள் நீங்கள் 65 வயதில் ஓய்வு பெறுகிறீர்கள். எனக்கு 83 வயதாகிறது. கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்தால் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன். சில சமயங்களில் நாங்கள் பின்னால் நிற்போம். சில சமயங்களில் நாங்கள் முன்னால் நிற்போம். எங்களிடம் ஏற்கனவே ஒரு தொகுதிக்கு போட்டியிட 10 நபர்கள் ஆர்வத்துடன் கேட்கும் பட்டியலே உள்ளது.
பா.ஜ.க. எங்கள் உத்தரவாதங்களை திருடுகிறது. நாங்கள் கர்நாடகாவில் தொடங்கினோம். அங்கு வெற்றி பெற்றோம். தெலங்கானாவிலும் வெற்றி பெற்றோம். மோடி எங்கள் உத்தரவாதத்தை திருடி இது எங்கள் உத்தரவாதம் என்று கூறி வருகிறார். பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை எங்களது உத்தரவாதம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
தீவிர தேர்தல் பணியில் இந்தியா கூட்டணி:
இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்சி காங்கிரஸ். மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் கட்சியாகவும் காங்கிரஸ் உள்ளது. இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இந்த கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசே போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்காக ராகுல்காந்தி இந்தியா முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Kharge On PM Modi: "பொய்களை பரப்பும் பிரதமர் மோடிக்கு 9 கேள்விகள் - பதில் வருமா?" காங்கிரஸ் தலைவர் கார்கே ஆவேசம்
மேலும் படிக்க: அமமுக - பாஜக கூட்டணி நிபந்தனைகள் இல்லாமல் உறுதியானது- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்