Kharge On PM Modi: பிரதமர் மோடியால் பதிலளிக்க முடியுமா என? காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் 9 கேள்விகளை பட்டியலிட்டுள்ளார். 


பிரதமரின் விமர்சனமும், காங்கிரசின் பதிலும்:


குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே, “2014ல் wஆட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக அவர்கள் (பாஜக) நம்புகிறார்கள். 1947ல் சுதந்திரம் கிடைத்தது, அதற்காக காங்கிரஸ் போராடியது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதை அங்கீகரிக்க விரும்பவில்லை. பிரதமர் எண்ணற்ற பொய்களைச் சொல்கிறார்,  அவருக்கு உண்மையைப் பேசும் பழக்கம் இல்லை” என சாடியுள்ளார். அதோடு, டிவிட்டர் பக்கத்தில் சில கேள்விகளையும் பட்டியலிட்டுள்ளார்.


கார்கே எழுப்பும் கேள்விகள்..!


கார்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், “தண்டி யாத்திரை” மற்றும் “வெள்ளையனே வெளியேறு இயக்கம்” போன்றவற்றில் பங்கேற்காதவர்கள், இன்று காங்கிரஸ் கட்சிக்கு தேசபக்தியை போதிக்கின்றனர்! ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பற்றி எண்ணற்ற பொய்யான விஷயங்களை மோடி கூறினார். நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்,



  • ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின்போது வேலையின்மை விகிதம் 2.2% ஆக இருந்தது, உங்கள் பதவிக்காலத்தில் அது 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்து இருப்பது ஏன்?

  • UPA ஆட்சியின் 10 ஆண்டுகளில், சராசரி GDP வளர்ச்சி விகிதம் 8.13% ஆக இருந்தது, உங்கள் ஆட்சிக் காலத்தில் அது 5.6% ஆக இருப்பது ஏன்? உலக வங்கியின் கூற்றுப்படி, 2011ம் ஆண்டே இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. 10 ஆண்டுகளில் 14 கோடி மக்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வந்தோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக பேச்சு வார்த்தைகளை பேசி பொய்யை மட்டும் பரப்புகிறீர்கள்!

  • டிஜிட்டல் மாற்றத்தில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு, ஆதார்-டிபிடி-வங்கி கணக்கு கட்டமைப்பின் கீழ் காங்கிரஸ் கூட்டணி அரசால் அடித்தளம் அமைக்கப்பட்டது. நாங்கள் ஏற்கனவே 2014 வரை 65 கோடி ஆதார் அட்டைகளை பதிவு செய்துள்ளோம். DBT-PAHAL இன் கீழ் மானியங்களின் நேரடி பரிமாற்றம் தொடங்கியுள்ளது. ஸ்வாபிமான் யோஜனா திட்டத்தின் கீழ் 33 கோடி ஏழைகளின் வங்கிக் கணக்குகளையும் தொடங்கியுள்ளோம்.

  • மோடி ஜி பொதுத்துறை நிறுவனங்களைப் பற்றி ஏதோ சொன்னார். உங்களின் "விற்பனை மற்றும் கொள்ளை" கொள்கையால் ஏப்ரல் 2022 வரை 147 பொதுத்துறை நிறுவனங்கள் முழு/பாதி/அல்லது பகுதி அளவு தனியார்மயமாவதற்கு வழிவகுத்துள்ளது என்பதை நினைவூட்டுகிறோம்.

  • அரசாங்கத்தில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் பெரும்பாலான SC, ST, OBC பணியிடங்கள் காலியாக உள்ளன.  ரயில்வே, எஃகு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு (துருப்புக்கள் இல்லாமல்) மற்றும் பெட்ரோலியம் ஆகிய 5 அமைச்சகங்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • நீங்கள் ஏக்லவ்யா பள்ளிகளைப் பற்றி சொன்னீர்கள், ஆனால் அதில் 70% ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே உள்ளனர் என்று சொல்லவில்லை.

  • கடந்த 10 ஆண்டுகளில் நமது ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையேயான இடைவெளி 3 மடங்கு அதிகரித்துள்ளதோடு, இந்த உண்மை தெரிந்திருந்தும், அரசு இதை ஒரு பிரச்னையாக ஏற்றுக் கொள்ளாமல், சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

  • மோடி ஜி, இரு அவைகளிலும் உங்களின் பேச்சுக்களில் காங்கிரஸைத்தான் திட்டினீர்கள். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், தன்னைப் பற்றி பேசாமல், காங்கிரஸ் கட்சியை மட்டும் விமர்சிக்கிறார். இன்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றி பேசவில்லையே?

  • உண்மையில் அரசிடம் எந்தத் தகவலும் இல்லை. NDA என்பது எந்த தரவும் கிடைக்கவில்லை (No Data Available) என்று பொருள்படும் அரசு மட்டுமே.  மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 நடத்தப்படவில்லை, வேலைவாய்ப்பு தரவு இல்லை, சுகாதார கணக்கெடுப்பு இல்லை. அரசு அனைத்து புள்ளிவிவரங்களையும் மறைத்து பொய்களை பரப்புகிறது. "மோடியின் கியாரண்டி" என்பது பொய்களை பரப்புவதற்கு மட்டுமே” என காங்கிரஸ் தலைவர் கார்கே பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பாஜக தரப்பிலிருந்து தற்போது வரை எந்த விளக்கமமும் வெளியாகவில்லை.