திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது : தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை நிச்சயம் ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தார்கள். ஆனால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழியும் அளவிற்கு போதைப்பொருள் கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கி உள்ளது. ஆகையால் திமுக அரசை கண்டித்து இன்று திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பேசிய அவர், இது நாள் வரை வருகின்ற தேர்தலில் அமமுக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்து வந்தோம். இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவுடன் கூட்டணியில் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சேர்ந்துள்ளோம். இன்று காலை தொலைபேசி மூலமாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர்கள் என அழைத்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


எங்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் கடிதம் மூலமாக ஏற்கனவே பாஜக முக்கிய நிர்வாகிகள் இடம் கொடுத்துள்ளோம். ஆகையால் அடுத்த அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் எத்தனை தொகுதிகள், எந்த எந்த தொகுதிகள் என்று முடிவு செய்யப்படும். நான் இந்த தேர்தலில் போட்டியிடலாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களைப் பொறுத்தவரை இந்திய மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தக்கூடிய பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.




வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கு அணில் போன்று அமமுக உறுதுணையாக இருக்கும். பாஜக - அமமுக கூட்டணியில் எந்த நிபந்தனைகளும் இல்லை, தேவையற்ற சில வதந்திகள் பரவி வருகிறது. தாமரைச் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்தால் அதன் பிறகு அடுத்தடுத்த கட்ட நகர்வுகளை அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தெரிவிக்கப்படும் என்றார். தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் அதிமுக கூட்டணியை அமைத்து வருகிறார்கள் அது நல்ல செய்தி ஆகும். பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யும் அளவிற்கு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. ஸ்டெர்லைட் விவகாரம் விவசாயிகளின் பிரச்சனை போன்ற திட்டங்களை பாஜக நிறைவேற்ற வில்லை. இந்தியா வளம் பெற வேண்டுமென்றால் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். 


அதிமுகவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் இன்று உயிருடன் இருந்தால் அவர்கள் நிலைப்பாட்டியே அனைவரும் பின்பற்றி இருப்போம்.  கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது சில காரணங்களால் அன்று உறுதியாகவில்லை. ஓபிஎஸ் - அமமுக இணைந்து செயல்படுவோம் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.




பாஜக கூட்டணி பேச்சு வார்த்தையை பொருத்தவரை எங்கள் கட்சிக்கு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதே போன்று ஓபிஎஸ் அணியினருக்கு அவர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். தேர்தல் ஆணையர் ராஜினாமா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,.. விரைவில் புதிய தேர்தல் ஆணையர் பதவி ஏற்ற பிறகு தேர்தல் நடத்துவார்கள். அண்ணாமலை தனது தகுதிக்கு மீறி பேசுகிறார், ஒருமையில் பேசுகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன என்ற கேள்விக்கு ? எனது தனிப்பட்ட கருத்தை நான் தெரிவிக்கிறேன், நல்ல மனிதர், படித்த புத்திசாலி, நண்பர், சிறந்த திறமை மிக்கவர், எனது நெருங்கிய நண்பர் அண்ணாமலை ஆவார். எனக்கும் எடப்பாடி. பழனிச்சாமிக்கும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. அதிமுகவிற்கு  துரோகம் செய்தவர், துரோகி பழனிச்சாமி , என்றும் அவருடன் இணைந்து பணியாற்றுவது என்பது நடக்காது. ஒருவேளை எடப்பாடி. பழனிச்சாமி நல்ல மனிதராக திருந்தி வந்தால் இணைவது குறித்து சிந்திப்போம். 


இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவையான கட்சி பாஜக, மீண்டும் பிரதமராக மோடி அவர்கள் வரவேண்டும் என்பதை எங்களுடைய நிலைப்பாடு ஆகும். பாஜக - அமமுக கூட்டணியில் எந்த எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, யார் வேட்பாளர் என்பதெல்லாம் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.