கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதி அருகே உள்ள தென்திருப்பதி சாலை நான்கு ரோடு சந்திப்பு மைதானத்தில் பாஜக சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாஜகவின் கோயம்புத்தூர் வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், பொள்ளாச்சி வேட்பாளர் வசந்தராஜன், திருப்பூர் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சார சிறப்புரை  மேற்கொண்டார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



தேயிலைக்கு உரிய விலை


இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, ”வரலாற்றில் முதல் முறையாக மேட்டுப்பாளையம் பகுதிக்கு பிரதமர் வந்து இருக்கின்றார். பிரதமர் முன்னிலையில் எனது வாக்குறுதிகளை சொல்கின்றேன். தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேட்டுப்பாளையம் கோவை இடையே உள்ள ரயில்பாதை இரட்டைரயில் பாதையாக்கபடும். நிலக்கடலை, பாக்கு, கருவேப்பிலை புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். காட்டு பன்றியால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாண்டியாறு புன்னம்புழா ஆற்றை பவானி ஆற்றுடன் இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.


திருடர் கூட்டத்தின் தலைவர் ஸ்டாலின்


இதனை அடுத்து பேசிய அண்ணாமலை, ”திருடர் கூட்டத்தின் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு பிரதமர் தமிழகம் வருவது பிடிக்கவில்லை. எனவே, வேடந்தாங்கல் பறவையை போல வருகின்றார் என கூறியுள்ளார். அவர் சொன்னதை நாங்கள் ஏற்கிறோம். ஒரு பறவையை போல நம்மிடம் அடைக்கலம் தேடி வருகிறார். கோபாலபுரம் பெருச்சாளிகளை போல ஒழியவில்லை. ஒரு பொம்மை முதல்வராகத்தான் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். முதல் 10 நாள் கூட்டணி பிரச்சாரம் செய்பவர்கள், கடைசி 10 நாளில் சம்பாதித்த காசை இறக்குவார்கள். இதுதான் திமுக ஸ்டைல். திமுகவினர் யாராவது பணம் கொடுத்தால் அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முக்குத்தி,தோடு கொடுத்தால் அது ஊழல் செய்த பணம் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழகத்தில் பிறக்காத மறத்தமிழன் மோடி. தமிழ் மொழியின் மகத்துவத்தை உலகம் முழுவதும் பிரதமர் பரப்பி வருகிறார். 543 உறுப்பினர்களில் மோசமான உறுப்பினர் என்றால் அது ஆ.ராசா தான். அவர் டெபாசிட் வாங்க கூடாது. அடுத்த 7 நாட்கள் கடுமையாக நாம் உழைப்போம். வீடு வீடாக ஏறி திமுகவின் அவலங்களை எடுத்துச் சொல்லுங்கள்” எனக் கூறினார்.


மேலும் படிக்க : திமுகனாலே வெறுப்பு அரசியல் தான் - கோவையில் பிரதமர் மோடி பேசியது என்ன?