பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( parandur airport )


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.




600-வது நாளை கடந்து  போராட்டம்


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகாம்பரம் கிராம மக்களின் போராட்டம் 624 வது நாளை எட்டியுள்ளது. கிராம மக்களின் போராட்டம் நடக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்தநிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 3  மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3 துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நில எடுப்பு தொடர்பான மண்டல அலுவலர்களும் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன.


தொடரும் நில எடுப்பு அறிவிப்புகள்


இதனிடையே முதற்கட்டமாக பொடாவூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் 1,75,412 ச.மீ., நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாளுக்குள் தெரிவிக்கலாம்.




விமான நிலைய திட்ட வருவாய் அலுவலருக்கு ஆட்சேபனையை எழுத்து மூலமாக தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் தேதியன்று விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பும் வெளியானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாளிதழ்களில் பல்வேறு நிலை எடுத்து தொடர்பான அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருந்தன. இதனால் சட்டப் போராட்டத்தையும் கிராம மக்கள் கையில் எடுத்துள்ளனர். 


 தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்


இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு  தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம் என கிராம மக்கள் தெரிவித்தனர். தபால் வாக்கு பெறுவதற்காக அதிகாரிகள் வயதானவர்களிடம் சென்று வாக்களிக்க கூறினர். வயதானவர்கள் யாரும் வாக்களிக்க தயாராக இல்லை என கூறி அதிகாரிகளை திருப்பி அனுப்பினர் . ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் கிராம மக்கள் யாருக்கும் வாக்களிக்க  விரும்பவில்லை எங்களுக்கு எங்கள் நிலம் முக்கியம் எங்கள் வீடு முக்கியம் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.  




இதனால் இன்று ஒரு வாக்குகளை கூட பதிவு செய்ய முடியாமல்,  அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். தொடர்ந்து கிராம மக்கள் ஒரு புறம் தேர்தலையும் பொறுப்பெடுத்தாமல்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம்,  அதிகாரிகளும் இதுவரை பெரிய அளவில் எந்த வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அதே போன்று எந்த அரசியல் கட்சியினரும் வாக்கு கேட்க பகுதிக்கு செல்லாமலே தவிர்த்து வருகின்றனர்.