கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதி அருகே உள்ள தென்திருப்பதி சாலை நான்கு ரோடு சந்திப்பு மைதானத்தில் பாஜக சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாஜகவின் கோயம்புத்தூர் வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், பொள்ளாச்சி வேட்பாளர் வசந்தராஜன், திருப்பூர் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சார சிறப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மருதமலை முருகன் மற்றும் கோனியம்மன் ஆகியோரை வணங்குவதாகவும் தனது உரையை பிரதமர் துவங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “நீலகிரி என்பது தேயிலைக்கு மிகவும் பிரபலமான பகுதியாகும். ஒரு தேநீர் வியாபாரியாக இந்த பகுதிக்கு வருவதில் எனக்கு மகிழ்ச்சி இருக்காதா? இந்த நேரத்தில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நலமும் முன்னேற்றமும் அடைய வாழ்த்துகிறேன்.
25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு
கொங்கு பகுதியும், நீலகிரியும் பாஜகவிற்கு என்றும் சிறப்பான பகுதிகளாகும். அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களது காலத்தில் பாஜகவில் இருந்து ஒருவரை எம்.பியாக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு இந்த பகுதி மக்கள் அனுப்பியுள்ளனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாஜகவிற்கு ஆதரவு இருப்பது தெளிவாக தெரிகிறது. திமுகவை ஆட்சியை முடிவு கட்டி வீட்டிற்கு அனுப்ப தேசிய ஜனநாயக கூட்டணியால் தான் முடியும் என ஒட்டுமொத்த தமிழகமும் கூறுகிறது. எனவே தான் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்கிற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிறது. திமுக காங்கிரஸ் ஆகிய வாரிசு கட்சிகள் பொய் சொல்லி ஆட்சியில் தொடர வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக வறுமையை ஒழிப்போம் என கூறினாலும் நாட்டின் வறுமையை அவர்களால் ஒழிக்க முடியவில்லை. அதுவே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளோம். சாதாரண மனிதர்கள் அதிகாரத்திற்கு வருவதை திமுகவும் காங்கிரஸும் விரும்புவதில்லை. அவர்களது வாரிசு தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதுவே, பாஜக பட்டியலின பெண் ஒருவரை இந்தியாவின் ஜனாதிபதியாக ஆக்கி பெருமிதம் சேர்த்தது. அதற்கு கூட திமுக ஆதரவளிக்கவில்லை.
கோவிட் காலகட்டத்தின் போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரிக்கப்படும் என கூறியதற்கு எதிர்க்கட்சிகள் சிரித்தனர். ஆனால் வெற்றிகரமாக இந்தியாவில் தடுப்பு ஊசி தயாரித்து பிற நாடுகளுக்கும் அதை வழங்கி கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளோம். கோவிட் காலகட்டத்தின் போது இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்த போது, 2 லட்சம் கோடி அளவிற்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் உதவி வழங்கி காப்பாற்றினோம். அப்படித்தான் சிறு குறு நடுத்தர தொழில் நிறைந்த கோவையிலும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன. அதனால் ஏராளமான இளைஞர்களின் வேலை உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் எண்ணற்ற திறமைகள் உள்ளது. மனித சக்தி அதிகமாக உள்ளது. இதை திமுக அரசு வீணடித்துக் கொண்டிருக்கிறது. ஜவுளித்துறை அதிகம் உள்ள கொங்கு பகுதியில் திமுக மின்சார கட்டணத்தை உயர்த்தி அத்துறையை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளனர்.
வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறோம்
ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கான டிபென்ஸ் காரிடரை இந்த பகுதிக்கு பாஜக வழங்கி, இந்த பகுதியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு அதன் மேம்பாட்டுக்காக செயல்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி தான் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி என நாங்கள் நம்புகிறோம். எனவே அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் அவசியமாகிறது. இந்த பகுதியின் தொழில் வளர்ச்சிக்காக இரண்டு வந்தே பாரத் ரயில்கள் கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை பொள்ளாச்சி இடையே விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த ஜல்ஜீவன் திட்டத்தை தமிழகத்தில் திமுகவிற்கு ஆதரவானவர்களுக்கு மட்டும் வழங்குகின்றனர். இந்த பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்பட்ட செய்தி வருத்தத்தை அளிக்கிறது.
இப்படி வளர்ச்சிக்கான அரசியலாக இல்லாமல் திமுக எப்போதும் வெறுப்பு அரசியலை தான் செய்து வருகிறது. எனது தலைமையிலான மூன்றாவது அரசாங்கம் அமையும் போது கொங்கு மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளின் மேம்பாட்டுக்காக இன்னும் வேகமாக விரைவாக செயல்படுவோம் என உறுதி அளிக்கிறேன். சமீபத்தில் கோவையின் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்றும் செயல்களை தான் திமுக செய்தது. அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவிலை நிறுவினோம். ராமர் தொடர்புடைய ஏராளமான புண்ணிய தளங்கள் தமிழகத்தில் உள்ளது. அங்கெல்லாம் சென்று நான் வழிபட்டு இருக்கிறேன். ஆனால் திமுக அரசு சனாதன ஒழிப்பு என பேசி வருகிறது. புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவிய போது தமிழ்நாட்டின் திமுக அதை புறக்கணித்தது.
2ஜி ஊழல்
சுரண்டல், ஊழல் என்பதற்கு மற்றொரு பெயர் திமுக. இப்போது நாம் 5g பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் 2ஜி ஊழல் செய்தவர்கள் திமுக. ஊழல்வாதிகளை நாம் தண்டிக்கின்றோம் ஆனால் அவர்கள் பாதுகாக்கின்றனர். சமீபத்தில் பாஜக கட்ச தீவு விவகாரத்தை கையில் எடுத்து, கச்சத்தீவினை எப்படி மற்றொரு நாட்டிற்கு வழங்கினார்கள் என்ற அரசு ஆவணங்களை வெளியிட்டோம். இவர்களின் துரோகம் குறித்து மக்களுக்கு தற்போது தெரிந்துள்ளது. இவர்களின் துரோகத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு பெரிதும் பாதிப்படைந்தனர். இதற்கு தமிழக மக்கள் இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். ஒரு இளைஞனாக காவல்துறையிலிருந்து வந்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து நல்ல அரசியலில் இருக்க வேண்டும் என நினைக்கும் ஒருவரை திமுகவிற்கு பிடிக்காது.
இந்த தேர்தலில் மோடியை நாட்டில் இருந்து அனுப்ப வேண்டும் என திமுகவினர் கூறுகின்றனர். அவர்களுக்கு எனது பதில். இந்த தேர்தலில் ஊழலும், வாரிசு அரசியலும், போதை கலாச்சாரமும், தேசியத்திற்கு எதிரான கொள்கை போக்கும் நாட்டில் இருந்து வெளியே அனுப்பப்படும் என்பதுதான். தமிழக மக்கள் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பாஜக வேட்பாளர்களின் வெற்றியானது தமிழகத்தின் வளர்ச்சிக்கான புதிய வழியை திறந்து வைக்கும் என்பது தான் மோடியின் உத்தரவாதம். இதை அனைத்து மக்களிடம் தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.