Lok Sabha Election 2024: இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை அரக்கோணம் தொகுதி சோளிங்கரில் தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. 


திமுகவுக்கு எதிராக மாஸ்டர் பிளான்


நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாகவே தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண்கிறது.


இதில், முதல்கட்டமாக திமுக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாமக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்தது.  பெரிய கட்சிகள் எதுவும் அதிமுக கூட்டணியில் இல்லாத நிலையிலும், இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.


இதற்கிடையில்,  தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் கடலூர், விருதுநகர், தஞ்சாவூர், மத்திய சென்னை, திருவள்ளூர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விருதுநகர் தொகுதியில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அதிமுக கூட்டணியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


2ஆம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் இபிஎஸ்


இந்த நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.  ஏப்ரல் 1ஆம் தேதி அரக்கோணம் சோளிங்கர், வேலூர், ஏப்ரல் 2ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, ஏப்ரல் 3ஆம் தேதி கரூர், நாமக்கல்,  ஏப்ரல் 4ஆம் தேதி நீலகரி (தனி), கோவை, ஏப்ரல் 5ஆம்  தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஏப்ரல் 6ஆம் தேதி தஞ்சை, நாகை, ஏப்ரல் 7ஆம் தேதி திருவள்ளூர் (தனி), சென்னை வடக்கு, ஏப்ரல் 8ஆம் தேதி மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.


தொடர்ந்து, ஏப்ரல் 9ஆம் தேதி தேனி, திண்டுக்கல், ஏப்ரல் 10ஆம் தேதி பொள்ளாச்சி, திருப்பூர், ஏப்ரல் 11ஆம் தேதி ஆரணி, திருவண்ணாமலை, 12ஆம் தேதி நாமக்கல், சேலம், 13ஆம் தேதி திருப்பூர், ஈரோடு, 14ஆம் தேதி சிதம்பரம் (தனி), பெரம்பலூர், 15ஆம்  தேதி மத்திய சென்னை,  சென்னை தெற்கு பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.  


24ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரையான முதல்கட்ட பிரச்சார பயணத்தை ஏற்கனவே அறிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.  திருச்சி நவலூர் குட்டப்பட்டு, வண்ணாங்கோவிலில் வரும் 24ஆம் தேதி பரப்புரையை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.  




மேலும் படிக்க


BJP Candidate List: கோவையில் அண்ணாமலை.. தென்சென்னையில் தமிழிசை.. வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!