BJP Candidate List: பாஜகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தென்சென்னையில் தமிழிசை சௌந்தரராஜனும் நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் போட்டியிடுகின்றனர். 


வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்:


பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.


தேர்தலுக்கு இன்னும் 28 நாள்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக, பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.


கோவையில் களம் காணும் அண்ணாமலை:


அதில், பல முக்கிய வேட்பாளர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா ஆளுநர் பதவியில் இருந்து விலகிய தமிழிசை சௌந்தரராஜன் தென்சென்னையில் களம் இறக்கப்பட்டுள்ளார்.


அதேபோல, திமுக மூத்த தலைவர் ஆ. ராசாவுக்கு எதிராக நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் களம் காண்கிறார். மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வமும் வேலூரில் ஏ.சி. சண்முகமும் போட்டியிடுகின்றனர்.


திருநெல்வேலி தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனும் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தரும் போட்டியிடுகின்றனர். பாஜக பலம் வாய்ந்ததாக கருதப்படும் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரியில் பாஜக சார்பாக சி. நரசிம்மன் களம் காண்கிறார்.


கடும் போட்டி தர காத்திருக்கும் பாஜக:


கோயம்புத்தூர் தொகுதியை பொறுத்தவரையில், இடதுசாரிகள் செல்வாக்கும் செலுத்தும் தொகுதியாக பார்க்கப்படுகிறது. கடந்த 4 தேர்தல்களில், மூன்று முறை அந்த தொகுதியை இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளது. ஆனால், இந்த முறை இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் பலமான வேட்பாளர்களை களம் இறங்கியுள்ளது.


சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளுமே திமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. அதில், தென்சென்னையை பொறுத்தவரையில், பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் இருக்கிறது. எனவே, கடந்த ஓராண்டாகவே, அந்த தொகுதியில் பாஜக வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.


அதற்கு ஏற்றார்போல், பலமான வேட்பாளரை பாஜக களத்தில் இறக்கியுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காகவே தெலங்கானா ஆளுநர் பதவியில் இருந்து தமிழிசை சௌந்தரராஜன் விலகியதாகக் கூறப்படுகிறது.