அதிமுகவின் மீது இருந்த பாரம் நீங்கிவிட்டது. பல்வேறு மாநிலங்களில் கூட்டணி கட்சி, எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கலைத்து, கட்சியை உடைத்த பாஜகவால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை என பாஜகவை விமர்சனம் செய்த சிவி.சண்முகம், தேசியமும் தமிழும் இன்றைக்கு தான் சிலருக்கு கண்ணுக்கு தெரிவதாகவும் அவர்களுக்கு குடும்பமும், பணமும் தான் முக்கியம் என பாமகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் விழுப்புரம் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இதில் சிவி.சண்முகம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.
ஆட்சியை பறிக்கும் பாஜக
இந்தியா முழுவதும் இந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில். பாஜகவோடு கூட்டணி வைத்தவர்கள். ஆட்சியில் பங்கேற்றவர்கள். எதிர்க்கட்சிகளாக இருந்த மாநிலங்கள் என இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பிராந்திய கட்சியாக இருந்தாலும், தேசிய கட்சியாக இருந்தாலும், வலிமமையான, ஆளுமைமிக்க காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த கட்சிகளாக இருந்தாலும் அனைத்தையும் சுக்கு நூறாக உடைத்து ஆட்சியை கலைத்துள்ளார்கள். ஆட்சியைப் பறித்துள்ளார்கள்.
அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை
இன்றைக்கு மிகப்பெரிய அதிகாரமிக்க இயக்கத்திடம் இருந்து அதிமுகவை காப்பாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளையும் அடித்து நொறுக்கிய கட்சி அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் அதற்கு காரணம். இது தொண்டர்களால் நிறைந்த கட்சி. தலைவர்களை நம்பி அதிமுக இல்லை. நேற்று வரை அதிமுக பாஜகவுடன் கள்ள உறவு என எல்லோரும் பேசினார்கள். ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் சொல்கிறார். பாஜகவை அதிமுக எதிர்க்கிறது என்று. தைரியமிக்க பொதுச் செயலாளரை அதிமுக பெற்றுள்ளது. நான் உள்ளிருந்து பார்க்கிறேன் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் கட்சி இருக்க வேண்டும், இரட்டை இலை இருக்க வேண்டும், மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என இயக்கத்தை கட்டி காப்பாற்றியுள்ளோம். இதனை மேடைக்காக பேசவில்லை இதுதான் நிதர்சனமான உண்மை.
உயிர் நாடியான தேர்தல்
இந்த ஐந்து ஆண்டு காலத்தில் எதிரிகளால் மட்டுமல்ல துரோகிகளாலும் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளோம். இரட்டை இலை சின்னத்தால் பணம், பதவி, முதல்வர் பதவிவரை அனுபவித்த துரோகி ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கினார்கள். இன்றைக்கு மீண்டும் முடக்குவதற்கு கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அத்தனையும் எதிர்கொண்டு அதிமுக வெற்றி பெறும். நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல், உயிர் நாடியான தேர்தல். தேர்தல் களத்தில் நம் பலத்தை காட்ட வேண்டும். மத்திய, மாநில அரசு துரோகத்தை சொல்லி வாக்கு கேட்போம்.
பாமகவை மறைமுகமாக சாடிய சி.வி.சண்முகம்
இன்றைக்கு பிரதமர் அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். ஆனால் வெள்ளம் வரும்போதும் மக்கள் செத்து மடியும்போது வரவில்லை. இன்னொருவர் தேசியமும், தமிழும் என பேசுகிறார். இன்றைக்கு தான் அவர்களுக்கு தேசியம் தெரிகிறது. தேசியமும் இல்லை தமிழும் இல்லை. வெறும் குடும்பம், பணம் வேறு ஒன்றும் இல்லை என பாமகவை மறைமுகமாக சாடினார். அதிமுகவின் மீது இருந்த பாரம் நீங்கிவிட்டது. சிலர் செய்த தவறுகளால், சிலர் மீதிருந்த கோபம் நம்மை பாதித்தது. தற்போது அந்த நிலை இல்லை என பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.