இளையராஜா பயோபிக்
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கும் தகவல் நேற்று அறிவிக்கப்பட்டது. தனுஷ் இந்தப் படத்தில் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இளையராஜாவே இந்தப் படத்திற்கு இசைமைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு திரைத்துறையில் நீண்ட கால நண்பரான பாரதிராஜா. கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இயக்குநர்கள் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா, உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்ச்சியில் பேசினார்கள். இந்நிலையில், பத்திரிகையாளராக இருந்து அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் திரைக்கு வந்த ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளையராஜா குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
இளையராஜா பற்றி இரண்டு தகவல்கள்
”நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 21 தி.மு.க வேட்பாளர்களின் பெயர்களை முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதேபோல் ஆதிமுக தங்களது தேர்தல் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது . இந்த பிரேக்கிங் நியூஸை எல்லாம் விட்டுவிட்டு, ராஜா சார் எங்க இருக்கிறாரோ அங்க இருக்கனும்னு நான் ஓடி வந்திருக்கிறேன்.
இளையராஜாவின் வாழ்க்கையை எடுப்பது சவாலான காரியம். ஏனென்றால் அது கதை இல்லை. பொன்னியின் செல்வனைவிட பெரிய ஒரு சகாப்தம். இளையராஜாவைப் பற்றி கமல் சார் சொல்லிக் கேட்பது இன்னும் சுவாரஸ்யமான ஒரு அனுபவம். கமல் சாருக்குப் பிறகு சின்ன சின்ன டீடெயில் முகத்தில் காட்டக் கூடிய ஒரு நடிகர் தனுஷ். இந்தப் படத்தில் இளையாராஜாவை எப்படி காட்டப் போகிறார் என்பதைப் பார்க்க காத்திருக்கிறோம். எப்போதும் பயோபிக் என்றாலே அதில் நிறைய சவால்கள் இருக்கும். ராஜா சார் பற்றி பெரிதாக வெளியே பதிவாகாத நிகழ்வுகளை ஒரு பத்திரிகையாளராக நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இளையராஜா வரலாற்றில் ஒரு முன்னோடியாக பார்க்கப்படுகிறார் என்பதற்கு இந்த நிகழ்வுகள் ஒரு சிறந்த உதாரணம்.
இயற்கையைப் போல் இயல்பாக இருந்தவர்
ஒரு முறை ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்ட்ரைக் அறிவிக்க இருந்தது. அப்போது இந்தப் போராட்டம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இயக்குநர் சங்கத்தில் இருந்து பாலச்சந்திரன், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கே.ஆர் மற்றும் நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் சிவகுமார் என அனைத்து துறைகளையும் சேர்ந்தவர்களும், சென்னை பிரசாத் லேபில் போராட்டத்தை அறிவிக்க வந்திருந்தார்கள். ராஜா சார் கம்போஸிங் முடித்து காலை உணவு சாப்பிட வெளியே வந்தார். அப்போது அவரிடம் ஸ்ட்ரைக் அறிவிக்க இருக்கிறோம் என்று சொன்னார்கள்.
இளையாராஜா நானும் இசையமைக்க வேண்டாமா என்று கேட்டார். நீங்க இசையமைப்பதை நிறுத்த வேண்டாம் நாங்கள் போராட்டத்தை பார்த்துக் கொள்கிறோம் என்று அனைவரும் சேர்ந்து சொன்னார்கள். அந்த ஸ்ட்ரைக் ஆறு மாதம் நடந்தது. அந்த ஆறு மாத காலமும் இளையராஜா இசையமைத்துக் கொண்டு இருந்தார். ஆறு மாத காலம் போராட்டம் முடிந்து திரும்பி வரும் போது இளையராஜாவின் பாடல்களை உதவியாக வைத்து தாங்கள் தங்களது படங்களை இயக்க இருப்பதாக போராட்டத்தில் இருந்த இயக்குநர்கள் சொன்னார்கள். ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்தம்பித்து இருந்த போது ராஜா இயற்கையைப் போல் இயல்பாக இசைத்துக் கொண்டு இருந்தார். இளையராஜா எப்படி ஒரு முன்மாதிரியான மனிதர் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்” எனப் பேசியுள்ளார் ரங்கராஜ் பாண்டே.