கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலுார் மலையமான் நாட்டின் தலைநகரம். மெய்ப்பொருள் நாயனார், தெய்வீக மன்னன் உள்ளிட்ட அரசர்களால் ஆளப்பட்ட புராதான நகரம். மக்களாட்சி துவங்கியது முதல் நகரின் வளர்ச்சி படிப்படியாக குறையத் துவங்கியது. விழுப்புரம் குறிப்பாக ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிந்த பிறகு திருக்கோவிலுார் வளர்ச்சி குன்றியதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 40 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாமல் பேரூராட்சியாகவே இருந்து வந்தது. தற்போதுதான் முதல் முறையாக நகராட்சி அந்தஸ்தை எட்டிப் பிடித்துள்ளது. அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. அரசு கலைக்கல்லுாரி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவையெல்லாம் தொகுதி அமைச்சர் பொன்முடியின் சமீப கால சாதனைகள். மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். திருக்கோவிலுாருக்கு வந்த பாதாள சாக்கடை திட்டம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்ட நிலையில், உடனடியாக பாதாள சாக்கடை கொண்டு வரவேண்டும்.
அதேபோல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், 10 ஆண்டுகளாக சீரழிந்து போன தெப்பக்குளத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நகர மக்கள் முன்வைக்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக திருக்கோவிலுார் நகராட்சியுடன் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அரகண்டநல்லுார் பேரூராட்சி, மணம் பூண்டி பகுதிகளை இணைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மாநகராட்சிக்கான தகுதி பெறும், ரயில் நிலையம், மார்க்கெட் கமிட்டி, அரசு போக்குவரத்து கழக பணிமனை, மருத்துவ வசதிக்கான மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்டவற்றை உள்ளடக்கியிருக்கும்.
Urban Local Body Election | வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பரப்புரையை தொடங்கிய அமைச்சரின் மகன்
வரும் காலங்களில் திருக்கோவிலுாரை தலைமை இடமாக கொண்டு மாவட்டம் பிரிக்க வாய்ப்பாக அமையும். இதனையெல்லாம் செயல்படுத்துவது என்பது மாவட்ட அமைச்சர் பொன்முடிக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை என்கின்றனர் நகரவாசிகள். திருக்கோவிலுார் நகராட்சி தேர்தலை தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் முன்னின்று வழி நடத்திக் கொண்டிருக்கும் அமைச்சர் இதற்கான வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். எதிர்க்கட்சி வரிசையில் களமிறங்கியிருக்கும் அ.தி.மு.க., மக்களின் எண்ணங்களை நாடி பிடித்து பார்த்து வாக்குறுதிகளை வழங்க தயாராகி வருகின்றனர். மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து வாக்குறுதிகளை கொடுக்கும் கட்சிக்கு வாக்களிக்க நகர மக்கள் தயாராகி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்