பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பது பலரும் அறிந்ததே. தந்தை கங்கை அமரன் மற்றும் அண்ணன் வெங்கட்பிரபுவை போலவே இவருக்கும் திரைப்படங்கள் மீதும் இசையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. ஜாலியான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் பிரேம்ஜியைப் பார்த்து அதிகம் கேட்கப்பட்ட கேள்வி, “எப்ப கல்யாணம்” என்பதாகதான் இருக்கும்.
42 வயதான அவருக்கு இன்னும் திருமணம் ஆகாததால், கோலிவுட் ரசிகர்கள் அவரிடம் அவ்வப்போது இந்த கேள்வியை எழுப்பி வந்தனர். இந்நிலையில், பிரேம்ஜி கமிட்டாகி விட்டார் என்றும், பிரேம்ஜிக்கு திருமணம் என்று போலியான தகவல்கள் அடிக்கடி வலம் வருவது வழக்கம். அதே போல ஒரு செய்திதான் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் டிரெண்டானது.
கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடி இருக்கும் பாடகி வினைத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேம்ஜியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், பிரபல பாடகர் எட் ஷீரனின் ‘பர்ஃபெக்ட்’ பாடலை சேர்த்து அந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதை பிரேம்ஜியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பாடல் வரிகளில், ”என் கைகளுக்கு இடையில் இருட்டினில் உன்னுடன் நடனமாடுகிறேன்” என குறிப்பிடும்படி இருந்தது. இதனால், இது கண்டிப்பாக காதல்தான் என முடிவு செய்துவிட்ட நெட்டிசன்கள், பிரேம்ஜிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
வழக்கம் போல, “காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை” என்பதை அறிவித்திருக்கிறார் பிரேம்ஜி. சமூகவலைதளத்தில் டிரெண்டான போலி தகவல்கள் குறித்து தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பதிலளித்திருக்கும் பிரேம்ஜி, “சத்தியமாக எனக்கு கல்யாணம் இல்லை. ஒரே ஒரு போட்டோவை போட்டதற்கு செய்தி பரப்பி விட்டனர். இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஜாலியாக இருக்கிறது. எழுதுபவர்கள் எழுதட்டும், பேசுபவர்கள் பேசட்டும்” என தெரிவித்திருக்கிறார்.
காதல் இல்லை, சிங்கிள்தான் என்பதை பிரேம்ஜி தரப்பில் இருந்து விளக்கம் கிடைத்துவிட்டது. இதனால், மீண்டும் கோலிவுட் பேச்சுலர் பட்டியலுக்கு திரும்பி இருக்கிறார் பிரேம்ஜி. ஆனால், அவருக்கு திருமணம் நடக்கப்போகிறது என்றால் அவரது ரசிகர்களுக்கு அது ஹேப்பி செய்தியாகத்தான் இருக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்