பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் தங்க அங்கி அணிந்து முடிசூட்டிக் கொண்டார். அரியணையில் அமர்ந்த சார்லசுக்கு மணிமகுடம் சூட்டப்பட்டதுடன் செங்கோல் வழங்கப்பட்டது. 


அரியணை ஏறிய வயதான மன்னர்:


இங்கிலாந்து அரியணையில் ஏறும் மிக வயதான நபராக சார்லஸ் உள்ளார். இவர் குழந்தை பருவத்தில் இருந்து அரண்மனையில் வளர்ந்தாலும், பாரம்பரிய முறைப்படி இவர் தனது கல்வியை அரண்மனையில் கற்கவில்லை. பள்ளிக்கு சென்று கல்வி பயின்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரிக்கு சென்று வரலாற்று பாடத்தில் கடந்த 1970-ம் ஆண்டில் பட்டம் பெற்றார். பல்கலைகழகத்திற்கு சென்று பட்டம் பெற்ற அரசு குடும்பத்தைச் சேர்ந்த முதல் நபர் சார்லஸ் ஆவார்.


பின்னர் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையில்  7 ஆண்டுகள் பைலட்டாக பணி புரிந்தார். அதன்பின் கடற்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றினார். இங்கிலாந்து கடற்படையின் எச்எம்எஸ் பிரானிங்டன் என்ற கண்ணிவெடி அகற்றும் கப்பலின் கமாண்டராகவும் பணியாற்றினார். 1976-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். சார்லஸ் இளவரசராக இருந்தபோது அவர் காதலில் விழுந்தார். தற்போது அவரது இரண்டாவது மனைவியாக இருக்கும் கமீலாவை தான் சார்லஸ் முதலில் காதலித்தார். இந்த காதல் தோல்வியடைந்தது. இதனையடுத்து அமண்டா நாட்ச்புல் என்பவரை  விரும்பினார். ஆனால், அவரும் சார்லஸை நிராகரித்து விட்டார். 


டயானா:


கடந்த 1981-ம் ஆண்டு சார்லஸ்-டயானாவை சந்தித்தார். அவரிடம் தனது காதலை கூறினார். டயானா சார்லசின் காதலை ஏற்றுக் கொண்டார். 1981-ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. முதல் மகன்  இளவரசர் வில்லியம் 1982-ல் பிறந்தார். இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி 1984-ல் பிறந்தார். சில ஆண்டுகள் இவர்களின் இல்லற வாழ்க்கை சுமூகமாக சென்றது. அதன் பின் சார்லஸ்-டயானா உறவில் விரிசல் ஏற்பட்டது. சார்லஸின் முன்னாள் காதலி கமீலாதான் இந்த பிரிவுக்கு காரணம் என கூறப்பட்டது.


கடந்த 1992-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். 1996-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அடுத்தாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த கார் விபத்து ஒன்றில் டயானா உயிரிழந்தார். கடந்த 2005-ஆம் ஆண்டு முன்னாள் காதலி கமீலாவை, இளவரசர் சார்லஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.


முடிசூட்டு விழா:


இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி, மரணம் அடைந்தார்.   எலிசபெத் மறைவால், சம்பிரதாயப்படி, அடுத்த 24 மணி நேரத்தில் இளவரசர் சார்லஸை, மன்னர் 3-ம் சார்லஸாக லண்டனில் உள்ளசெயின்ட் ஜேம்ஸ் அரண்மனையின் அசெஷன் கவுன்சில் அறிவித்தது. இந்நிலையில் இன்று அவருக்கு முறைப்படி முட்சூச்சு விழா கோலாகலமாக நடைபெற்றது.