இந்தியில் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஜவான்:


தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கிய அட்லீ, இந்தியில் இயக்கி வரும் படம் “ஜவான்”. இந்த படத்தில் ஷாரூக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், சஞ்சய் தத், பிரியா மணி, யோகி பாபு, சுனில் குரோவர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளது. 


இப்படியான நிலையில் ஜவான் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், சென்னை, மும்பை என மாறி மாறி  நடைபெற்றது. தொடர்ந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்ற நிலையில், படமானது ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. 


செப்டம்பர் 7 ரிலீஸ்:


மேலும் இப்படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் காப்பி என்ற குற்றச்சாட்டு  எழுந்தது. அதேபோல் டைட்டில் வீடியோவை பார்த்தப்போது அட்லீ தான் தமிழில் விஜய்யை வைத்து இயக்கிய மெர்சல் படத்தின் காட்சிகளைப் போல இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்தனர்.  இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கடந்த சில ஆண்டுகளாகவே ஷாரூக்கானுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப்படங்கள் அமையாத நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் அவர் நடித்த பதான் படம் வெளியாகி வசூலை அள்ளியது. இதனால் ஜவான் படத்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி  வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.