1971ஆம் ஆண்டு முதல் மாநகராட்சியாக செயல்பட்டு வரும் மதுரை தற்போது 100 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக விரிவடைந்துள்ளது. 1971ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்ந்த மதுரை முத்து 1980ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்தார். இறுதியாக கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நேரடி வாக்குப்பதிவு மூலம்  அதிமுகவை சேர்ந்த வி.வி.ராஜன் செல்லப்பா மேயரானார். பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மதுரை மாநகராட்சியில் வாக்குபதிவு நடந்து முடிந்துள்ளது. 









நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் தி.மு.க 67 வார்டுகளிலும், தி.மு.க கூட்டணிகளான காங்கிரஸ் 5 வார்டுகளிலும், விசிக ஒரு வார்டுகளிலும், சி.பி.எம் 4 வார்டுகளிலும், ம.தி.மு.க 3 வார்டுகளிலும் என தி.மு.க கூட்டணி மொத்தம் 80 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.  எதிர்க்கட்சியான அ.தி.மு.க 15 வார்டுகளிலும், பா.ஜ.க ஒரு வார்டிலும்,  சுயேட்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக திமுக சார்பில் இந்திராணி பொன்.வசந்தி அறிவிக்கப்பட்டார். துணை மேயர் பொறுப்பு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி சார்பில் 80ஆவது வார்டில் வெற்றி பெற்ற டி.நாகராஜ் துணை மேயருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.




100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சிக்கான மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2ஆம் தேதி பதவியேற்ற நிலையில் இன்று காலை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட மேயர் வேட்பாளரான இந்திராணி பொன்வசந்த் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று மதியம் துணை மேயருக்கான மறைமுகத்தேர்தல் மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்ட வளாகத்தில்  நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் நாகராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் துணைமேயராக  பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மாமன்ற உறுப்பினர்கள் துணை மேயருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.










அப்போது மாமன்ற கூட்டத்தில் அமர்ந்திருந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்க கம்யூனிஸ்ட் என முழக்கமிட்டார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில்...,”  மதுரை மாநகராட்சியின் துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு துணை மேயர் பதவியை ஒதுக்கியமைக்கும், மதுரை மாநகராட்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு நன்றி எனவும், மக்களுக்கான சேவையை தொடர்வோம்” என்றார்.

 



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைமேயர் நாகராஜன் பேசுகையில்..,” மதுரையின் உட்கட்டமைப்பிற்கான 27கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதல்வரிடம் வழங்கியதையடுத்து மதுரையின் உட்கட்டமைப்பு வசதிக்காக 500கோடி ரூபாய் ஒதுக்கூட செய்த முதல்வருக்கு, தமிழகத்தின் முன்னோடி மாநகராட்சியாக மதுரை மாநகராட்சியை உருவாக்க பாடுபடுவோம் என்றார்.